Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

குஜராத் கலவரத்தைத் தூண்டியது மோடி அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

2002-ல் குஜராத் கலவரத்தை நரேந்திர மோடி அரசு தூண்டிவிட்டது, அதேநேரம் 1984 சீக்கியர் கலவரத்தை காங்கிரஸ் அரசு தடுத்து நிறுத்த முயற்சி்த்தது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

சீக்கியர் கலவரம் நடைபெற்றபோது கட்சிப் பொறுப்பில் இல்லாததால் நான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி திங்கள்கிழமை இரவு ஒளிபரப்பானது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

1984 சீக்கியர் கலவரத்தின்போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதுபோன்ற கொடூரமான சம்பவம் இனிமேல் நடைபெறக் கூடாது.

குஜராத் கலவரத்துக்கும் சீக்கிய கலவரத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. குஜராத் கலவரத்தின்போது அந்த மாநில அரசே கலவரத்தைத் தூண்டிவிட்டு வன்முறைத் தீயை பரவச் செய்தது.

மோடி அரசுக்கு கலவரத்தில் நேரடியாக தொடர்பு உள்ளது. நேரில் பார்த்த சாட்சிகள் மோடிக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

கல வரத்தின்போது அங்கிருந்த செய்தியாளர்கள் உண்மையை எடுத்துரைத்துள்ளனர். அவற்றின் மூலம் சிறுபான்மை மக்கள் மீது அரசு நிர்வாகமே தாக்குதல் நடத்தியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

மன்னிப்பு கோர மாட்டேன்

சீக்கியர் கலவரத்தின்போது நான் கட்சிப் பொறுப்பில் இல்லை. எனவே நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸாரில் சிலருக்கு அந்த கலவரத்தில் தொடர்பு உள்ளது. அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

குஜராத் கலவரத்தின்போது மோடி தலைமையில்தான் எல்லாமே நடந்தது, அகமதாபாத் வீதிகளில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே கூறியுள்ளார். அவருடைய கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.

மோடி பயம் இல்லை

நரேந்திர மோடி குறித்து அச்சப்படவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக பாஜகவை தோற்கடிப்போம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒருவேளை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவினால் அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்வேன்.

ஆட்சி, அதிகாரம் ஒரே இடத்தில், ஒரே மனிதரிடம் குவிந்திருப்பதை பாஜக விரும்புகிறது. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

ஜனநாயகக் கட்சியான காங்கிரஸில் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்கும் வழக்கம் இல்லை. 2009 தேர்தலில் மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்ததாகக் கூறுவது தவறு. அவர் ஏற்கெனவே பிரதமராக இருந்தார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் எம்.பி.க்கள் கூடி அவரே பிரதமராக நீடிக்க முடிவு செய்தனர்.

வாரிசு அரசியலை விரும்பவில்லை

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது தவறு. ஊழல் எங்கு நடந்தாலும் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும். அசோக் சவாண் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்து விட்டேன்.

இமாசல பிரதேச முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

வாரிசு அரசியலை நான் விரும்பவில்லை. ஆனால் கட்சி பாகுபாடின்றி பாஜக, சமாஜ்வாதி, திமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது என்றார்.

ஆம் ஆத்மி கட்சி குறித்து ராகுல் கூறியதாவது:

அந்தக் கட்சி மக்களைக் கவர்ந்த விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. அந்த வகையில் அவர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. காங்கிரஸுக்கு தனி பாரம்பரியம், கொள்கை, கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் ஆம் ஆத்மியில் அப்படி எதுவும் இல்லை என்றார்.

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுத்தால் அந்த அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெறுமா என்று ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், ஊழல் புகார்கள் தொடர்பாக சட்டம் தன் கடமையைச் செய்யும், அது யாராக இருந்தாலும் கவலையில்லை. இதுதான் எனது நிலை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x