கரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று முக்கிய ஆலோசனை

கரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று முக்கிய ஆலோசனை
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கரோனா வைரஸ்தொற்று 2-வது அலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கரோனா அவசர சிகிச்சை பிரிவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எய்ம்ஸ் மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் 266 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 253 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் மேலும் 70 படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்.

மன தைரியம்

கரோனா நோயாளிகளை பார்த்த போது எனது மனம் உடைந்துவிட்டது. எனினும் அவர்களது மன தைரியத்தை மெச்சுகிறேன். மருத்துவர்களும், சுகாதார ஊழியர்களும் தன்னலமின்றி சேவையாற்றி வருகின்றனர். துறவிகள் போல சேவையாற்றும் அவர்களை தலைகூப்பி வணங்குகிறேன்.

வைரஸ் பரவல் அதிகமாக உள்ள மாநில சுகாதார அமைச்சர்களுடன் சனிக்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தஉள்ளேன். அதன்பிறகு வரும்திங்கள்கிழமை நாடு முழுவதும் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

2-வது அலையை தடுப்போம்

கடந்த ஆண்டு நமது நாட்டில் போதுமான பாதுகாப்பு கவச உடைகள், வென்டிலேட்டர்கள், என்95 முகக்கவசங்கள் இல்லை. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே தன்னிறைவை எட்டினோம்.முதல் கரோனா வைரஸ் அலையை தடுத்தது போன்று 2-வது அலையையும் வெற்றிகரமாக தடுப்போம்.

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளசந்தையில் கூடுதல் விலைக்கு விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கரோனா தடுப்பூசிகள் தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in