

பாதுகாப்பு, அணுசக்தி, ஹைட்ரோ கார்பன், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இந்தியா - ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு முதன்முறையாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அப்போது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை அந்நாட்டு தேசிய அவசரகால நிர்வாக மையத்தை பார்வையிட்ட மோடி, இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிறகு இரு நாடுகளுக்கிடை யிலான 16-வது உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை கிரெம்ளின் மாளிகையில் நேற்று தனியாக சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் சிரியா உள்நாட்டுப் போர் நிலவரம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது உட்பட சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, இருநாட்டு பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு, அணுசக்தி, ஹைட்ரோகார்பன், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக பாதுகாப்புத் துறையைப் பொருத்தவரை கமோவ்-226டி ஹெலிகாப்டரை கூட்டாக தயாரிப்பது, இத்துறை தொடர்பான தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் விரிவாக்கமாக, 5, 6-வது பிரிவை ஆந்திராவில் நிறுவ இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பின்னர் பிரதமர் மோடியும், அதிபர் புடினும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கிடையிலான உச்சி மாநாடு, கடந்த 2000-ம் ஆண்டு முதல் மாஸ்கோவிலும் டெல்லியிலும் ஆண்டுதோறும் மாறிமாறி நடைபெறுகிறது. இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். கடந்த ஆண்டு டெல்லியில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மோடி 2-வது முறையாக பங்கேற் றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இரு நாடுகளுக்கிடையிலான ஆண்டு வர்த்தகம் இப்போது ரூ.66,500 கோடியாக உள்ளது. இதை அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.