

குஜராத்தைச் சேர்ந்த படிப்பறிவில்லாத ஒரு பெண், தனது மருமகளை ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறச் செய்து சாதனை படைத்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் சகுந்தலா வன்சாரா. இவர் நார்மாடிக் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அந்த சமூகத்தில் பெண்களை பள்ளிக்கு அனுப்புவது இல்லை. இதன்காரணமாக சகுந்தலா ஆரம்பப் பள்ளிக்குகூட செல்லவில்லை.
தனது சமூகத்தின் கட்டுப்பாட்டால் எழுத்தறிவில்லாத பெண்ணாக வாழ் வதை நினைத்து வெம்பிய அவர், சமூகத்தின் கட்டுப்பாடுகளை மீறி தனது பெண்களை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். அவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக அவரின் மகள் மஞ்சிதா இப்போது காவல் துறையில் டி.எஸ்.பி.யாக பணியாற்றுகிறார். கடந்த 2008-ம் ஆண்டில் சகுந்தலாவின் மகன் ஹிம்மத் வன்சாராவுக்கும் கர்நாடகத்தின் ஷிமோகா பகுதியைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகியான சவுதாம்பிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
தனது மகள் மட்டும் அல்ல, மருமகளும் அரசு அதிகாரியாக வேண்டும் என்று மனதுக்குள் சூளுரைத்த அவர், மருமகள் சவுதாம்பிகாவை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார்படுத்தினார்.
தன்னால் போட்டித் தேர்வு எழுத முடியாது என்று முதலில் மறுத்த சவுதாம்பிகா, மாமியாரின் பாசத்தால் அந்தப் போட்டிக்குத் தயாரானார்.
திருமணத்துக்குப் பிறகு மருமகளை சமையல் அறை பக்கமே வரவிடாமல் சகுந்தலா தடுத்தார். எப்போதாவது சவுதாம்பிகா சமையல் அறைக்கு வந்தால் அவளை அன்போடு கண்டித்து நூலகத்துக்கு அனுப்பிவிடுவார். டெல்லிக்கு அனுப்பி அங்குள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கச் செய்தார்.
அடுத்தடுத்து இரண்டு முயற்சிகளில் சவுதாம்பிகா தோல்வி அடைந்தாலும் மாமியாரின் ஊக்கம் அவரை முன்னுக்குத் தள்ளியது. 3-வது முறையாக அவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று தனது மாமியாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
அண்மையில் வெளியான யு.பி.எஸ்.சி. தேர்வில் அவர் 1061-வது இடம் பிடித்திருப்பதால் அவருக்கு ஐ.ஏ.எஸ். வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிகிறது.
எனினும் இந்திய குடிமைப் பணிகளில் ஏதாவது ஒரு பதவியை அவர் தேர்ந்தெடுப்பார் என்று சவுதாம்பிகாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.