

ஜாமீன் நீட்டிப்பு கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.
தெஹல்கா நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அதன் நிறுவனர் ஆசிரியர் தருண் தேஜ்பால் கடந்த நவம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தாய் கடந்த மே 18-ம் தேதி மரணமடைந்ததால் அவருக்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் ஜாமீன் வழங்கியது.
தருண் தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நீட்டிப்பு கோரி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். ‘உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் தாயின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. தாய் மரணத்தையடுத்து குடும்பத்தினருடன் அவர் தொடர்ந்து இருக்க வேண்டியிருப்பதால் ஜாமீனை மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.