Published : 16 Apr 2021 04:49 AM
Last Updated : 16 Apr 2021 04:49 AM

கரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகள் என்னென்ன?

கொல்கத்தா 

கரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை மருத்துவர்கள் விவரித்துள்ளனர். இதுதொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது:

முதல் அலையின்போது இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை அறிகுறிகளாக இருந்தன. தற்போது 2-வது அலையில் உடல்சோர்வு, உடல் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை புதிய அறிகுறிகளாக உள்ளன.

முதல் அலையைவிட தற்போது கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது. ஆனால், உயிரிழப்பு குறைவாக உள்ளது. கடந்த முறை 60 வயதுக்கு மேற்பட்டோர் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகமாக வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இளைஞர்களின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்களிடம் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் அதிகம் தென்படுவது இல்லை. வயதானவர்களுக்கு மட்டுமே வைரஸ் அறிகுறிகள் அதிகமாக உள்ளன. கடந்த முறை காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் கரோனா வைரஸை எளிதில் கண்டறிய முடிந்தது. இந்த முறை இளைஞர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாததால் வைரஸ் நோயாளிகளை கண்டறிவதில் சிக்கல் எழுகிறது.

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில மருத்துவர்கள் கூறியதாவது:

ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நோயாளி குணமடைந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்ட பிறகும் சி.டி. ஸ்கேனில் அவர்களின் நுரையீரலில் 80 சதவீதம் அளவுக்கு தொற்று இருப்பது தெரிய வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலை காணப்படுகிறது.

எனவே, ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகும் நோயாளிகளை தனிமையில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் கரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x