

கரோனா பரவல் காரணமாக உ.பி. தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பிவரும் நிலையில் அவர்களுக்கான புதிய விதிகளை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் உ.பி. தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் உ.பி. திரும்பினர். பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் தங்கள் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பழைய நிலை திரும்புவதற்குள் கரோனா வைரஸ் மறு உருவம் எடுத்து மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பணிக்குச் சென்ற உ.பி. தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதில், “இந்த தொழிலாளர் களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இதில் கரோனா தொற்றுள்ளவர்களை 14 நாளும், தொற்று இல்லாதவர்களை 7 நாளும் தனிமைப்படுத்த வேண்டும். இந்த தனிமையை அவர்கள் தங்கள் வீடுகளில் செய்துகொள்ள வேண்டும். அவர்களின் முகவரி மற்றும் கைப்பேசி எண்ணை அதிகாரிகள் பெற்று, அவர்களை கண்காணிக்க வேண்டும். வீடுகளில் வசதி இல்லாத தொழிலாளர்களை அரசு பாதுகாப்பு இல்லங்களில் வைத்து, தனிமைக்கான வசதி செய்துதர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
உ.பி.யிலும் கரோனா வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால் 9 மாவட்டங்களில் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோ, பிரயாக்ராஜ், வாரணாசி, கவுதம்புத்நகர், காஜியாபாத், மீரட் ஆகிய முக்கிய மாவட்டங்களும் ஊரடங்கு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உ.பி.யில் 1 முதல் 12 -ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 15 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மே 20-ம் தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது இணைய வகுப்புகளை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.