Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு எதிரான வழக்கில் போலீஸ் சதி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நம்பி நாராயணன்

புதுடெல்லி

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை 1994-ல் உளவு வழக்கில் சிக்க வைத்ததில் உள்ள போலீஸ் சதியை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன பிரிவில் (இஸ்ரோ) பணியாற்றி கடந்த 2001-ல் ஓய்வு பெற்றவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். கடந்த 1994-ல் இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை இவர் வெளிநாடுகளுக்கு விற்றதாகவும் அந்த நாடுகளுக்காக உளவு பார்த்ததாகவும் கூறி கேரள போலீஸார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் சிபிஐ நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரிய வந்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. நம்பி நாராயணன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதற்கு கேரளாவின் 10 போலீஸ் அதிகாரிகளே காரணம் எனவும் சிபிஐ தெரிவித்தது.

இந்நிலையில் தன்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் சட்டப் போராட்டம் நடத்தினார். இதில் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ல் உத்தரவிட்டது. மேலும் அவருக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைத்தது.

இந்நிலையில் இக்குழு அளித்த அறிக்கையை தேச நலன் கருதி உடனே பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த ஏப்ரல் 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி ஏ.எம். கான் வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நிலைக் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 1994 உளவு வழக்கில் நம்பி நாராயணனை சிக்க வைத்ததில் போலீஸ் அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் இஸ்ரோவின் சில ரகசிய ஆவணங்களை 2 விஞ்ஞானிகள் மற்றும் மாலத்தீவை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் வெளிநாடுகளுக்கு விற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்தும் விசாரிக்க சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நம்பி நாராயணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x