

நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை தாங்க முடியாத காங்கிரஸ் கட்சியின் தற்போதைய ஒரே திட்டம் 'சிதைப்பது' என்று பிரதமர் மோடி கேரளாவில் நிகழ்ச்சியில் பேசும் போது கடுமையாக குற்றம்சாட்டினார்.
ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வரும் ஈழவா வகுப்பைச் சேர்ந்தவருமான ஆர்.சங்கர் என்பவரது சிலையை திறந்து வைத்துப் பேசினார்.
“தோற்கடிக்கப்பட்டவர்கள் தற்போது நாங்கள் அழிக்கப்பட்டோம், உங்களையும் அழிப்போம் என்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் நாட்டுக்கு என்ன ஆனாலும் அவர்களுக்கு கவலையில்லை. நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்பட விட மாட்டோம் என்ற முடிவுடன் செயல்பட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற செயல்பாட்டையே நகைச்சுவையாக்கி விட்டனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறிய, விவாதம், மறுப்பு, தீர்மானமான முடிவு என்பதை அவர்கள் மறந்து விட்டனர். காங்கிரஸ் கட்சி அவரை மேற்கோள் காட்ட தவறவில்லை, ஆனால் அவர் கூறியதன் பொருளைத்தான் இழந்து விட்டனர்.
இப்போது அவர்கள் கொள்கையெல்லாம் இடையூறு செய்தல், சிதைத்தல், மற்றும் அழித்தல் ஆகியவையே. குடியரசுத் தலைவர் கூறிய 3 அடிப்படைகளுடன் 4-வது ஒன்றையும் நான் சேர்க்க விரும்புகிறேன், அதுதான் வளர்ச்சி”
இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.