

விஜயவாடா அருகே மாட்டிறைச்சி, கோழி இறைச்சி கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கொழுப்பை சுத்தி கரித்து, கலப்பட நெய் தயாரித்து பிரபல நிறுவனங்களின் பிராண்ட் பெயரில் விற்றுவந்த கும்பலை போலீஸார் கைது செய்தனர். கும்பலின் தலைவர் பனிகுமாரும் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2013-ம் ஆண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு, டெண்டர் மூலம் பனிகுமார் நெய் விநியோகம் செய்துள்ளார். ஆனால் இந்த நெய்யின் தரம் சரியில்லை என 4 முறை தேவஸ்தானம் திருப்பி அனுப்பி உள்ளது. பின்னர் தற்போது வேறு நபர் மூலம் திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், தேவஸ்தானத்துக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் நெய்யும் பனி குமார் மூலமாக பினாமி பெயரில் விநியோகம் செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்து கோபமுற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இது குறித்து விசாரணை நடத்த சித்தூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயினு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மாணிக்கியால ராவ் செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறும்போது, “பனி குமார் விநியோகம் செய்த நெய்யில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரிய வேண்டி உள்ளது. குற்றம் நிரூபண மானால் பனிகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந் தவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவர்” என்றார்.