

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் அதாவது 2 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை ஊரடங்கை அமல்படுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
லக்னோ, அலகாபாத், வாரணாசி, கான்பூர், கவுதம் புத்த நகர், காஜியாபாத், மீரட், கோரக்பூர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காணொலி மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மே 20-ம் தேதிக்குப் பின் சூழலை ஆய்வு செய்தபின் தேர்வுகள் குறித்து புதிய தேதி அறிவிக்கப்படும். மே 15-ம் தேதி வரை 1-12-ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளூம் மூடப்படும். இந்தக் காலகட்டத்தில் எந்தத் தேர்வுகளும் நடத்தப்படாது. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 20-ம் தேதிக்குப் பின் முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் அனைத்தும் இம்மாதம் 30-ம் தேதிவரை மூடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் இம்மாதம் 24-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது மே 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்போது 20-ம் தேதி வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “ மக்களுக்கு முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக விலகல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனை, பல்ராம்பூர் மருத்துவமனை படிப்படியாக கோவிட் சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்படும். தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் உ.பி. மாநில மக்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க வேண்டும். மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் இருக்கிறதா என்பது குறித்து மருத்துவ அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.