

மேற்கு வங்கத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீதமுள்ள 4 கட்டங்களிலும் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் பேசுகிறார்கள், தேர்தல் நடத்தை விதிகளையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறுகிறார்கள் என திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் டெரீக் ஓ பிரையன், குணால் கோஷ் உள்ளிட்டோர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
''சித்லாகுச்சி தொகுதியில் சிஎஸ்ஐஎப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் விதித்த தடையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்பாடுகள், ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும், அவமானப்படுத்தும் செயலாகும்.
தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சுயாட்சித் தன்மையுடன், சுதந்திரமாகச் செயல்பட்டு, தேர்தலை நடத்த உருவாக்கப்பட்டது. நடுநிலைமையுடன் செயல்பட்டுத் தேர்தல் ஆணையம் பணிகளைக் கவனிக்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒரு சாரருக்குச் சார்பாக நடக்கிறது. குறிப்பாக பாஜகவுக்கு வெளிப்படையாகவே சார்பாக நடக்கிறது அல்லது பாஜகவின் கட்டளைப்படிதான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி இருவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறியுள்ளனர். கடந்த 12-ம் தேதி கல்யாணி பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்துவா, நாமசூத்ரா சமூகத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இரு சமூகத்துக்கும் மம்தா பானர்ஜி ஏதும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மதரீதியான, சமூக ரீதியில் குறிப்பாக மத்துவா, நாமசூத்ரா சமூகத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளது மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தின் படியும், தேர்தல் நடத்தை விதிகளின்படியும் விதி மீறலாகும்.
ஆதலால், மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்க இருக்கும் 4 கட்டத் தேர்தலிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவருக்கும் தடை விதிக்க வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.