

பாகிஸ்தான் அத்து மீறினால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா ராணுவ ரீதியாக தகுந்த பதிலடி கொடுக்கும் என்றுஅமெரிக்க உளவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் போர் பதற்றம் நிலவும் நாடுகள் குறித்து அமெரிக்க உளவுத் துறை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் அறிக்கை சமர்ப்பிக்கிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடி போர் மூள்வதற்கான வாய்ப்புகுறைவு. எனினும் இரு நாடுகள் இடையிலான பிரச்சினைகள் பூதாகரமாகும் வாய்ப்புகள் உள்ளன.
காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது, தீவிரவாத தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களால் இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் அத்து மீறினால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா ராணுவரீதியாக தகுந்த பதிலடி கொடுக்கும். இந்தியாவின் பதிலடி கடந்த காலங்களைவிட பயங்கரமானதாக இருக்கக்கூடும். அணு ஆயுத நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் கவலை அளிக்கும் விஷயமாகும்.
இந்திய, சீன எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும்.எல்லையில் இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெற்றிருந்தாலும் போர் பதற்றம் குறைய வாய்ப்பில்லை. சர்வதேச அரங்கில் அனைத்து துறைகளிலும் அமெரிக்காவுக்கு சீனா அச்சுறுத்தலாக இருக்கும். குறிப்பாக தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்யும். தென்சீனக் கடலில் ஆதிக்கத்தை விரிவுபடுத்த ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடும்.
மியான்மரில் உள்நாட்டு குழப்பம்
மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டிருப்பதால் அந்த நாட்டில் உள்நாட்டு குழப்பம் மேலும் அதிகரிக்கும். ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும். ஏற்கெனவே கைப்பற்றிய நகரங்களை ஆப்கானிஸ்தான் அரசு விட்டுக் கொடுக்காது. ஆனால் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை அரசு படைகளால் மீட்பது கடினம். இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.