

டெல்லியில் உள்ள முக்கியப் பிரமு கர்களை குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் நடத்த எல்இடி தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவுக்கு உளவுத் துறை தகவல் கொடுத்துள்ளது. இதற்காக, ஜம்மு காஷ்மீர் மற்றும் இதர சர்வதேச எல்லை வழியாக தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் நுழைத்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் கூறியிருப்பதாவது:
எல்இடி அமைப்பைச் சேர்ந்த துஜனா, உகாஷா என்ற 2 பேர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி யில் பதுங்கி உள்ள இவர்கள், டெல்லியில் உள்ள முக்கிய பிரமுகர் களை குறிவைத்து மனித வெடி குண்டு அல்லது கையெறி குண்டு மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட் டுள்ளனர். இவர்கள் இந்தத் தாக்குதலை தாங்களாகவோ அல்லது தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலமோ நடத்த வாய்ப்புள்ளது.
தீவிரவாதிகள் தகவல் பரிமாறிக் கொண்டபோது, நோமன், ஜைத், குர்ஷீத் ஆகிய குறியீட்டு பெயர் களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக, டெல்லியின் லோதி காலனியில் உள்ள சிறப்புப் பிரிவு, இந்திய தண்டனை சட்டத்தின் 120-பி (கூட்டு சதி) பிரிவின் கீழ் கடந்த 1-ம் தேதி முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் எல்இடி தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் பற்றிய தகவலை திரட்டுமாறும் ஊடுருவிய தீவிரவாதிகளை தேடுமாறும் சிறப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோத செயல் (தடுப்பு) சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. இந்த எப்ஐஆர், சம்பந்தப்பட்ட தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் நடை பெறுவதைத் தடுத்து நிறுத்த தேவையான அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவ்வாறு போலீஸ் வட்டாரத்தில் கூறப்படு கிறது.