நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் மே.வங்கத்தில் முதல்முறை பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி

நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் மே.வங்கத்தில் முதல்முறை பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி
Updated on
1 min read

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட முஸ்லிம் கட்சியான இந்திய மதச்சார்பற்ற முன்னணியும்(ஐஎஸ்எப்) இடது சாரி – காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

எனினும் இங்கு திரிணமூல் – பாஜக இடையில்தான் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் இடதுசாரி கூட்டணி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் மீது புகார் எழுந்தது.

மாநிலத்தின் 4 கட்ட தேர்தலுக்கும் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் எவரும் பிரச்சாரம் செய்ய வராதது இதற்கு காரணமாக கூறப்பட்டது. அருகிலுள்ள அசாம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்த ராகுலும், பிரியங்கா வத்ராவும் மேற்கு வங்கத்துக்கு வரவில்லை.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் எட்டு கட்ட தேர்தலில் நான்கு கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இங்கு 5-ம் கட்டமாக வரும் 17-ம் தேதி 45 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இதையொட்டி காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, இங்கு முதல்முறையாகப் நேற்று பிரச்சாரம் செய்தார். வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் கோவல்போக்கர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.

அடுத்து மீதமுள்ள மூன்று கட்டத் தேர்தலிலும் ராகுல் காந்தி தீவிரப் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளர் பிரியங்காவும் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இம்மாநிலத்தில் 6-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதி நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in