Last Updated : 19 Dec, 2015 03:54 PM

 

Published : 19 Dec 2015 03:54 PM
Last Updated : 19 Dec 2015 03:54 PM

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு ஜாமீன்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று பரபரப்பான சூழ்நிலைகளுக்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கையகப்படுத்தி, அதன் சொத்துகளை முறைகேடாகப் பயன் படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல்காந்தி, பொருளாளர் மோதி லால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும் சோனியா, ராகுல் ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.50,000 பிணைத்தொகையில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, மேலும் ஒருவர் இவர்களது பிணைக்கு உறுதிக் கையொப்பமிட வேண்டும், அந்த நிபந்தனையும் நிறைவேற்றப்பட உறுதி அளித்ததால் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் வழங்கப்பட்டதும் சோனியா, ராகுல் இருவரும் அவசரமாக கோர்ட் வளாகத்திலிருந்து வெளியேறினர்.

இன்று நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியதும் சோனியா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கில் விசாரணைக்கு இருவரும் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும், நேரில் ஆஜராவார்கள் என்றும் உறுதி அளித்தார்.

இதனையடுத்து சோனியா, ராகுல் ஆகிய இருவருக்கும் ரூ.50,000 பிணைத்தொகையில் ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டோருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி வாதாடினார். மேலும் குற்றம்சாட்டப்பட்டோர் வெளிநாடு செல்ல கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிய சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை கோர்ட் நிராகரித்ததாக கபில் சிபல் தெரிவித்தார்.

வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சாம் பிட்ரோடா, மருத்துவ காரணங்களினால் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்ணான்டஸ், சாம் பிட்ரோடா, சுமன் துபே ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

சோனியா, ராகுல், மன்மோகன் கருத்து:

கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்த்தனர். சோனியா காந்தி கூறும்போது, “தற்போதைய அரசு எதிர்க்கட்சிகளைக் குறிவைக்கிறது, அரசு எந்திரங்களை இதற்காகவென்றே பயன்படுத்துகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இன்று ஆஜரானோம். இந்த வழக்கில் உண்மை வெளிவரும் என்று நான் முற்றிலும் நம்புகிறேன்.

இந்த வழக்கின் பின்னணியில் உள்ளவர்களின் நோக்கம் என்னவென்பதை நான் முழுதும் அறிவேன். இவர்கள் எங்களை நீண்ட காலமாகவே குறிவைத்து வருகின்றனர். இவர்களுக்கு இதில் வெற்றி கிட்டாது.

எங்களுக்கு எதிரான இத்தகைய பிரச்சார உத்திகளைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை, நாங்கள் பின்வாங்கப்போவதில்லை தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

ராகுல் காந்தி கூறும்போது, “நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் தலை வணங்குவர் என்று நினைக்கின்றனர், காங்கிரஸும் நானும் இதனை ஒருபோதும் செய்ய மாட்டோம்” என்றார்.

மன்மோகன் சிங் கூறும்போது, "சோனியா, ராகுலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் ஆதரிக்கும். நாங்கள் சில லட்சியங்களுக்காக இருக்கிறோம், அந்தப் பாதையிலிருந்து கட்சியை ஒருவரும் திசைதிருப்பி விட முடியாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x