Last Updated : 14 Apr, 2021 06:27 PM

 

Published : 14 Apr 2021 06:27 PM
Last Updated : 14 Apr 2021 06:27 PM

பாஜக 70 இடங்களில் கூட வெற்றி பெறாது; 100 இடங்களில் வெல்வோம் என மோடி கூறுகிறார்: மம்தா பானர்ஜி பதிலடி

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி | கோப்புப் படம்.

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 70 இடங்களில் கூட வெல்ல முடியாது. ஆனால், பிரதமர் மோடியோ 4 கட்டத் தேர்தலிலும் 100 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறுகிறார் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கிண்டல் செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 4 கட்டங்களில் 135 தொகுதிகளுக்குத் தேர்தல் முடிந்தது.

இந்நிலையில் 5-வது கட்டத் தேர்தலுக்காக ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தாப்கிராம்-ஃபுல்பாரி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மேற்கு வங்கத்தில் இதுவரை 4 கட்டங்களாக 135 தொகுதிகளுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 135 தொகுதிகளில் 100 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவிக்கிறார். நான் சொல்கிறேன். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின்போது பாருங்கள், பாஜக 294 இடங்களில் 70 இடங்களில் கூட வெல்லாது.

ஒரே பிரச்சினையைப் பற்றி பல்வேறு இடங்களில், பல்வேறு விதமாக பொய்யான பிரச்சாரத்தை பாஜகவும், அதன் தலைவர்களும் முன்னெடுக்கிறார்கள். டார்ஜிலிங் பகுதியில் உள்ள லேபாங் பகுதியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்ஆர்சி கொண்டுவர மாட்டோம் என்கிறார்.

ஆனால், 14 லட்சம் மக்களை அடையாளம் கண்டுவைத்துள்ள மத்திய அரசு, அவர்களைத் தடுப்பு முகாமுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறது. இந்த 14 லட்சம் பேரையும் என்ஆர்சி சட்டத்தில் சட்டவிரோத அகதிகள் எனக் கூறி முகாமுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் உங்களை அச்சறுத்தும், சர்ச்சைக்குரிய என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவர அனுமதிக்காது. நீங்கள் அனைவரும் குடிமக்கள். என்னுடைய வேண்டுகோள், நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது பல்வேறு மாநிலங்களில் இருந்த மேற்கு வங்க மக்களை என்னுடைய அரசுதான் செலவு செய்து சொந்த மாநிலத்துக்கு அழைத்து வந்தது. ஆனால், எந்த பாஜக தலைவரும் இதற்கு உதவவில்லை. அப்போது வெளியே வரவில்லை.

பாஜக என்பது மக்கள் விரோதக் கட்சி. ஏழைகளுக்கு எதிரான கட்சி. ஏழைகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துதான் உணவுப்பொருட்கள் விலை உயர்வுக்கு அனுமதிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை அனுமதிக்கிறது. சமையல் சிலிண்டர் விலையை விண் அளவுக்கு உயர்த்துகிறது''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x