

தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை நேற்று ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உகாதி ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட்டது. காலையில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் மற்றும் சேனாதிபதியாக திகழும் விஸ்வகேசவர் ஆகியோர் தங்க வாசலில் எழுந்தருளினர். இவர்களின் முன்பாக பிலவ நாம வருடத்திற்கான புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் உகாதி பச்சடி அங்குள்ள பக்தர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. மூலவருக்கு புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு வைர அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. உகாதி திருநாளுக்கு உரித்தான ‘ரூபாய் ஆரத்தி’ சுவாமிக்கு கொடுக்கப்பட்டது.
உகாதி பண்டிகையை முன்னிட்டு கோயில் உள்ளேயும் வெளியிலும் சிறப்பாக அலங்கரிக் கப்பட்டது. இவை பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. கோவிந்த ராஜ பெருமாள் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், காளஹஸ்தி சிவன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.