

இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் கரோனா வைரஸ் பரவு வது அதிகரித்து வருகிறது. கரோனாவைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இருந்தபோதும் நாள்தோறும் பதிவாகும் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கு முன்பு ஒரே நாளில் 1,114பேர் உயிரிழந்ததே உச்சமாக உள்ளது. தற்போது ஒரேநாளில் 879பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் 89.51 சதவிகிதம் பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 1.25 சதவிகிதம் பேர் உயிரிழந்துவிட்டனர். 9.24 சதவிகிதம் பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையை மருத்துவமனைகளில் தொடர்கின்றனர்.
புதிதாக பாதிப்புக்குள்ளா வோரை பார்க்கும் போது தினசரிகரோனா பாதிப்பில் புதிய உச்சத்தை தொட்டு விட்டோம். அது மேலும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு வாரத்துக்கு 1.5 சதவிகிதமாக இருந்த தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம்,27.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எனவே இது மற்றொரு கவலையளிக்கக் கூடிய விஷயமாகும்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 10.85 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசிடம் இருக்கும் தகவல்களின்படி காலை 11 மணி நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1,67,20,000 பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் கைவசம் உள்ளன. இந்த மாதம், ஏப்ரல் இறுதிவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களுக்கு 2,01,22,960 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
சரியாக திட்டமிடப்பட்டு வருவதையும், தடுப்பூசிகள் தட்டுப்பாட்டில் இல்லை என்பதையுமே இது தெளிவாகக் காண்பிக்கிறது.
மத்திய அரசிடம் போதுமான தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில மாநிலங்கள் கரோனாதடுப்பூசிகளை சரியாக நிர்வகிக்காமல் வீணடித்து விட்டன. சிறியஅளவிலான மாநிலங்கள் கேட்கும் தடுப்பூசிகள் 8 முதல் 9 நாட்களுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பெரியமாநிலங்கள் கேட்கும் தடுப்பூசிகள்5-வது நாளிலேயே அனுப்பப்படுகின்றன. இதுவரை மாநிலங்களுக்கு 13.10 கோடி தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில்10 கோடிக்கும் அதிகமாக டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசிகளை கையாள்வதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. கேரளாவில் தடுப்பூசிகள் வீணடிக்கப்படும் சதவீதம் பூஜ்ஜியமாக உள்ளது. அதே நேரத்தில் சில மாநிலங்களில் 8 முதல் 9 சதவீதம் வரை தடுப்பூசி டோஸ்களைவீணடிக்கின்றனர். மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவது கவலையளிப்பதாக உள்ளது. தினந்தோறும் சராசரியாக 57ஆயிரம் பேர் அங்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு தினமும் 10 லட்சம் பேருக்கும் அதிகமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.