

ஆந்திராவில் தடையை மீறி சட்டப்பேரவைக்கு செல்ல முயன்ற எம்எல்ஏ ரோஜாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆந்திர சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி சட்டப்பேரவை உறுப்பினர் ரோஜாவை ஓராண்டுக்கு அவையில் இருந்து நீக்கி சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.இதையடுத்து அவர் பேரவையிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், நேற்று காலையில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு ரோஜா செல்ல முயன்றார். ஆனால் பாதுகாவலர்கள் அவரை அனுமதிக்க வில்லை. இதனால் பாதுகாவலர்களுக்கும் ரோஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு ரோஜா பேரவைக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து நாம்பல்லி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ரோஜா மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை நிஜாம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரோஜாவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
இதனிடையே, ரோஜாவை ஓராண்டுக்கு அவையில் இருந்து நீக்கியது சட்டப்பேரவையின் விதிகளை மீறிய செயல் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர். மேலும் ரோஜா மீதான நடவடிக்கையை ரத்து செய்துவிட்டு, அவரை மீண்டும் அவையில் அனுமதிக்கக் கோரி அக்கட்சியினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதை சபாநாயகர் ஏற்கவில்லை.
ரோஜா கைது செய்யப் பட்டதை கண்டித்து அவரது சொந்த தொகுதியான நகரியில் நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.