தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை: தேர்தல் ஆணையத்தை கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்

தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை: தேர்தல் ஆணையத்தை கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
Updated on
1 min read

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக24 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்ததை கண்டித்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

மத ரீதியாகப் பேசியதாகவும், மத்தியப் படைகளுக்கு எதிராக வெகுண்டெழுமாறு வாக்காளர்களை தூண்டியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 7-ம் தேதி பிரச்சாரக் கூட்டத்தில் பங்றே்ற அவரது பேச்சு தொடர்பாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தா காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணாவில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அதன்படி இன்று அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in