ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து; 60-வது நாடாக அனுமதி வழங்கிய இந்தியா

ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து; 60-வது நாடாக அனுமதி வழங்கிய இந்தியா
Updated on
1 min read

ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்துக்கு 60-வது நாடாக இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தை தயாரித்தது. ஸ்புட்னிக் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து கரோனாவுக்காக தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து. ஆனால் கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று சர்ச்சை எழுந்தது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியது

ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதன் பின்னர் பல நாடுகள் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை வாங்கி பயன்படுத்த தொடங்கின.

இந்த மருந்தை ஆய்வகத்தில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தவும், அவற்றை விநியோகிக்கவும் இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தது. ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 10 கோடி டோஸ் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பு மருந்துகள் இந்தியாவு விநியோகிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

எனினும், இந்த மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை நடத்த இந்தியா முதலில் அனுமதி மறுத்து வந்தது. பின்னர் இதற்கான அனுமதியை இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது.

அதன்படி, ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை 100 இந்தியர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகள் நடந்தன.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. இந்தநிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.

இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அதிகாரி இன்று அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் 3-வது கரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வருகிறது.

பாகிஸ்தான், மியான்மர், எகிப்து, லெபனான், மொரிஷியஸ், வெனிஸுலா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 59 நாடுகள் ஏற்கெனவே ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை தங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கின. தற்போது 60-வது நாடாக இந்தியாவும் அனுமதி வழங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in