பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு ஓய்விற்கு பின் உ.பி.யில் புதிய பதவி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு ஓய்விற்கு பின் உ.பி.யில் புதிய பதவி
Updated on
1 min read

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி சுரேந்திரா குமார் யாதவ், தீர்ப்பளித்த அன்றே ஓய்வு பெற்றார். இவர், ஆறு மாதங்களுக்கு பின் உத்தரப்பிரதேச லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த டிசம்பர் 6, 1992 இல் இடிக்கப்பட்டது. இதற்காக பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தின்(விஎச்பி) சார்பில் கரசேவை நடத்தப்பட்டது.

இந்த இடிப்பை தொடர்ந்து நாடு முழுவதிலும் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. இதனால், முக்கியத்துவம் பெற்ற மசூதி இடிப்பு வழக்கை சிபிஐ விசாரணை செய்தது.

இதில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உ.பி.யின் முன்னாள் முதல்வரான கல்யாண்சிங் மற்றும் விஎச்பி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவாகின.

இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக, அயோத்தியின் உளவுத்துறையினர் அறிக்கையை சிபிஐ சமர்ப்பித்திருந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பின் கடந்த வருடம் செப்டம்பர் 30 இல் வெளியான தீர்ப்பில் அந்த ஆதாரம் ஏற்கப்படவில்லை.

சுமார் 2,300 பக்கங்களில் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதி சுரேந்திரா குமார் யாதவ் தனது தீர்ப்பை வழங்கி இருந்தார். அதில் அவர், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தார்.

கரசேவகர்களுக்குள் ஊடுருவிய அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் மசூதி இடிக்கப்பட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். குற்றவாளிகள் பட்டியலில் சிக்கிய சிலர் இறந்து விட்ட நிலையில், மிஞ்சியிருந்த 34 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை அளித்த தினத்திலேயே சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திரா குமார் யாதவ் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இவர் சுமார் ஆறு மாதத்திற்கு பின் தற்போது உ.பி.யின் லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பணிக்கான உத்தரவில் ஏப்ரல் 6 இல் உபியின் ஆளுநரான அனந்திபென் பட்டேல் கையெப்பம் இட்டிருந்தார். எனினும், தனது புதிய பணியில் நீதிபதி சுரேந்திரா குமார் நேற்று பொறுப்பேற்ற பிறகே வெளியில் தெரிந்துள்ளது.

நீதிபதி சுரேந்திரா குமார், லோக் ஆயுக்தாவின் மூன்று துணைத்தலைவர்களில் ஒருவராக இருப்பார். இவருக்கு அப்பதவி, பாஜக ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரையின் பேரில் கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in