Published : 13 Apr 2021 03:11 am

Updated : 13 Apr 2021 04:50 am

 

Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 04:50 AM

புகழ்பெற்ற ரஷ்புடின் பாடலுக்கு நடனமாடிய கேரள கல்லூரி மாணவர்கள்- ‘லவ் ஜிகாத்’ சர்ச்சையை கிளப்பிய பாஜக பிரமுகருக்கு கண்டனம்

rasputin-song
நவீன் கே.ரசாக், ஜானகி

திருவனந்தபுரம்

புகழ்பெற்ற ரஷ்புடின் பாடலுக்குதிருச்சூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவனும், மாணவியும் சேர்ந்து நடனமாடினர். இதைப் பார்த்த பாஜக பிரமுகர் ஒருவர் ‘லவ் ஜிகாத்’ சந்தேகத்தை எழுப்பியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் நவீன் கே.ரசாக், ஜானகி ஓம் குமார் ஆகியோர் சேர்ந்து கல்லூரி வளாகத்திலேயே ரஷ்புடின் பாடலுக்கு நடனமாடி வீடியோவாக வெளியிட்டனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஷெரில்ஆடி வைரலானதைப் போல இவர்கள் இருவரது நடனமும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.


கொச்சி அறிவியல் மற்றும்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயங்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் நடனப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. தனி நபராகவோ, அல்லது குழுவாகவோ சேர்ந்து ஆடும் நடனத்தை வரும் 14-ம் ஆம் தேதிக்குள் வாட்ஸ் அப் வழியாக அனுப்புமாறு கேட்டிருந்தது. இந்தப் போட்டிக்கான முடிவுகள் வரும் 16-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.இதற்காகத்தான் ஒரே கல்லூரியில் படிக்கும் நவீன் கே.ரசாக்கும், ஜானகி ஓம் குமாரும் சேர்ந்து தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தினர். ஆனால் இந்த வீடியோ உருவானதன் பிண்ணனி தெரியாமல் வழக்கறிஞரும் பாஜக ஆதரவாளருமான கிருஷ்ணராஜ் தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், “இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆடுவதில் ஏதோ தவறு இருக்கிறது. ஜானகியின் பெற்றோர் கவனமாக இல்லாவிட்டால் நிமிஷாவின் தாயாருக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும். ஜானகியின் தந்தை ஓம் குமார் மற்றும்அவரது மனைவிக்காக பிரார்த்தனை செய்வோம்” என்றதோடு இதை லவ் ஜிகாத்தோடு ஒப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவை ஏராளமானோர் பகிர, இது கேரளாவில் விவாதப்பொருளானது. நிமிஷா என்றபாத்திமா காதலுக்காக மதம்மாறி கடைசியில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கையில் சேர்ந்தார். பின்னர் கேரளாவைவிட்டே வெளியேறினார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடைசியில் நிமிஷாவையும், அவரது 10 மாதக்குழந்தையையும் மீட்டனர். அந்தசம்பவத்தோடு கல்லூரியில் போட்டிக்காக நடனம் ஆடியவர்களை வழக்கறிஞர் ஒருவர் ஒப்பிட்டு பதிவேற்றியதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடனம் ஆடிய நவீன் ரசாக் கூறும்போது, “வகுப்புவாதத்தை முன்னிறுத்தி வந்த அபத்தமான கருத்துகளுக்கு கவலைப்படவில்லை. ஏனென்றால் எங்கள் தலைமுறையின் நோக்கமெல்லாம் வளர்ச்சியைப் பற்றியே இருக்கிறது. இந்த நாகரீக உலகிலும் வகுப்புவாதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதே அபத்தம் தான்’’ என்றார். மாணவி ஜானகியோ, “நானோ, என் குடும்பமோ கருத்து சொல்லவோ, எதிர்வினையாற்றவோ இதில் எதுவும் இல்லை” என ஒற்றை பதிலில் நிராகரித்துவிட்டார்.

இந்திய மருத்துவக் கழகத்தின் மாணவர் கூட்டமைப்பு, ‘இருவரின் நடனத்துக்கு மதச்சாயம்பூசியிருப்பது அருவருக்கத்தக்கது’ என கண்டணம் தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் கண்டனம்

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில்,“கல்லூரி மாணவர்களின் உற்சாகநடனம் சிறப்பாக உள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால் அதனை‘லவ் ஜிகாத்’ என சிலர் விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவ, மாணவிகளுக்கிடையே உள்ளநட்பை மத ரீதியாக விமர்சனம் செய்திருப்பது கடும் கண்டணத்துக்குரியது.

அவரவர் மதத்தின் மேல் பற்று இருக்கலாம். ஆனால் அதுவேமத வெறியாக, வெறுப்பாக மாறிவிடக் கூடாது. மேலும் எல்லாவற்றையும் லவ் ஜிகாத் என்று அழைப்பது அடிப்படைவாதத்தின் கொடூரத்தை நீர்த்து போகச்செய்துவிடும். நம் மதத்தின் மேன்மையைப் புரிந்து கொள்ளாதவர்களே இதுபோன்ற முட்டாள்தனமான விமர்சனங்களை செய்துவருகிறார்கள். சிறப்பாக நடனமாடிய மாணவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.


ரஷ்புடின்கேரள கல்லூரி மாணவர்கள்லவ் ஜிகாத்‘லவ் ஜிகாத்’ சர்ச்சைபாஜக பிரமுகருக்கு கண்டனம்Rasputin song

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x