Last Updated : 13 Apr, 2021 03:11 AM

 

Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM

கட்டுக்கு அடங்காத கரோனா; பெங்களூருவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்

பெங்களூரு

பெங்களூருவில் நாளுக்கு நாள்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மார்ச் 2வது வார‌த்தில் இருந்து நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகள், திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் இரவு நேர‌ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கை மீறி சாலைகளில் வலம் வந்த 270 இரு சக்கர வாகன‌ங்கள், 60 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை கர்நாடகாவில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 6 ஆயிரமாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 10 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 7 ஆயிரத்து 584 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 579 ஆக உள்ளது. இதில் 6 ஆயிரத்து 387 பேர் பெங்களூருரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பெங்களூருவில் இதே வேகத்தில் கரோனா பரவினால் அடுத்த வாரத்தில் நாளொன்றுக்கு 25 ஆயிரத்தை கடக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில் கரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இரவு நேர ஊரடங்கு உட்பட அரசு விதித்துள்ள விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதே வேகத்தில் கரோனா பரவினால் மகாராஷ்டிராவில் 2வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தியதைப் போல பெங்களூருவிலும் ஊரடங்குஅமல்படுத்த வாய்ப்பு உள்ளது.

மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, மக்களுக்கு மேலும் சிரமம்ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மக்கள் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி தொற்றின் சங்கிலி தொடரை தகர்க்க ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x