

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக்காலம் இன்றுடன் (ஏப்.12) முடிவடைந்தது. இதனையடுத்து சுஷீல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாகவே தலைமைத் தேர்தல் ஆணையர் ஓய்வு பெற்றவுடன் அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு மூத்த தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதே வழக்கம்.
அந்த அடிப்படையில், சுனில் அரோராவிற்கு அடுத்த உயர் பதவியில் உள்ள சுஷீல் சந்திரா பெயரை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, சுஷீல் சந்திராவை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
சுஷீல் சந்திரா கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதுவரை 10 மாநிலத் தேர்தலில் தேர்தல் ஆணையராக தனது பங்களிப்பை அளித்துள்ளார். வேட்புமனு தாக்கலை ஆன்லைனில் செய்யும் முறையைக் கொண்டுவந்தார்.
தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அவர் வரும் மே 2022 வரை பதவியில் இருப்பார். இவரது பதவிக்காலத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும். இதில் உத்தரப் பிரதேசத் தேர்தல் மிகவும் சவாலானது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தில் பணியில் சேர்வதற்கு முன்னதாக சுஷீல் சந்திரா மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.