

மது விற்பனை செய்யும் பார்களை மூடி கேரள அரசு பிறப்பித்த உத்தரவில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டின் மொத்த மது விற்பனை யில் 18 சதவீதம் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டது. சிறிய மாநிலமான கேரளாவில் அதிக அளவு மது அருந்தப்படுவதால், வரும் 2023-க்குள் முழு மதுவிலக்கு கொண்டு வருவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, புதிதாக மது விற்பனை பார் களுக்கு லைசென்ஸ் வழங்கப் படவில்லை. மாநிலத்தில் இருந்த 700 பார்கள் மூடப்பட்டன. இது தொடர்பாக வழக்குகள் தொடரப் பட்டதையடுத்து, கேரள உயர் நீதிமன்றம் மாநிலத்தில் உள்ள 24 ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டும் மது விற்பனை செய்ய அனுமதி அளித்தது. கடந்த மார்ச் 31-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து கேரள பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவகீர்த்தி சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் முகுல் ரோத்கி, ‘கேரள அரசின் உத்தரவால் பணக் காரர்கள் மட்டுமே மது அருந்த முடியும் என்ற நிலை ஏற்பட் டுள்ளது. இது அடிப்படை உரிமைக்கு எதிரானது. மேலும், கேரள அரசின் உத்தரவு பாரபட்ச மானது’ என்று வாதிட்டார்.
கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இது மாநில அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. மேலும் பார்களில் மது விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், சில்லறை கடைகளில் வாங்கிச் சென்று வீடுகளில் மது அருந்த தடையில்லை’ என்று வாதிட்டார்.
கேரள அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘ஒரு மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. நியாயமற்ற முறையில், அடிப்படை உரிமை களை மீறும் வகையில் பாரபட்ச மான முடிவுகளை எடுத்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். நல்ல நோக்கத்துக்காக கேரள அரசு எடுத்துள்ள இந்த முடிவில் எந்த சட்ட விரோதமும் இல்லை. கேரள அரசு தங்கள் கொள்கையை அமல்படுத்த தடை யில்லை.
அதேநேரம், இந்த முடிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.