பிரதமர் நரேந்திர மோடியின் காதில் முஸ்லிம் இளைஞர் கூறியது என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜுல்பிகர் அலி.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜுல்பிகர் அலி.
Updated on
1 min read

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 2-ம் தேதி சோனார்பூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும்போது, முஸ்லிம் இளைஞர் ஒருவர், பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவரது காதில் இளைஞர் எதையோ கூற, பிரதமர் மோடி இளைஞரின் தோளை அரவணைத்து உன்னிப்பாகக் கேட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யார் அந்த இளைஞர், பிரதமர் மோடியிடம் அவர் என்ன கூறினார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலித்தது.

புகைப்படம் தொடர்பாக ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி, எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்தார். "அந்த இளைஞர், முஸ்லிம் கிடையாது. மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக நடத்திய நாடகம்" என்றார். இதனிடையே முன்னணி ஊடகங்களின் நிருபர்கள், விசாரணை நடத்தி அந்த இளைஞரை தேடி கண்டுபிடித்தனர்.

அந்த இளைஞர் கொல்கத்தாவின் மீடியாபுரூஸ் பகுதியை சேர்ந்த ஜுல்பிகர் அலி (38) என்பது தெரியவந்தது. அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஏப்ரல் 2-ம் தேதி சோனார்பூரில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 40 விநாடிகள் மட்டுமே பிரதமருடன் பேசினேன். இது 40 ஆண்டுகள் வரை என் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருக்கும்.

எனது பெயரை பிரதமர் கேட்டறிந்தார். எனக்கு ஏதாவது வேண்டுமா என்று அன்போடு கேட்டார். எனக்கு எம்எல்ஏ சீட் வேண்டாம், கவுன்சிலர் சீட் கூட வேண்டாம். உங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும். அதுதான் எனது பேராசை என்று கூறினேன். அவர் உடனடியாக புகைப்பட நிபுணரை அழைத்து புகைப்படம் எடுக்க செய்தார்.

நான் முஸ்லிம். கடந்த 2014-ம்ஆண்டு முதல் பாஜகவில் உள்ளேன். தற்போது தெற்கு கொல்கத்தா மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவராக பதவி வகிக்கிறேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற விரும்பினேன். அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in