

மதவாதக் கட்சி என்ற முத்திரையை மீறி அனைத்து தரப்பினரின் வாக்குகளைப் பெற கேரள பாஜக பல வியூகங்களை வகுத்து தேர்தலை சந்தித்தது. அந்தவகையில் கேரளாவில் பத்து சிறுபான்மையினருக்கும் போட்டியிட வாய்ப்பளித்தது பாஜக.
கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக இந்தத்தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளையும் பெற கடும் முயற்சி செய்தது. அதில் உச்சபட்சமாக பாஜக சார்பில் சிறுபான்மையின வேட்பாளர்கள் 10 பேர் போட்டியிட்டனர்.
கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் நேமம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபால் வெற்றிபெற்றார். அதன்மூலம் கேரள சட்டப்பேரவையில் பாஜக தனது கணக்கைத் தொடங்கியது. இந்தமுறை கூடுதல் இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சித்து வரும் வேளையில், கேரள முதல்வர் பினராயி விஜயனோ, “கடந்தமுறை நேமத்தில் பாஜக தொடங்கிய கணக்கை, இந்தமுறை நாங்கள் முடித்துவைப்போம்” என்றார்.
ஆனால் இந்துக்களின் வாக்குகளுக்கு சபரிமலை விவகாரத்தை பாஜக ஆழமாக நம்புகிறது. சபரிமலையின் புனிதத்தைக் காக்கும் வகையில்சிறப்புச் சட்டம் இயற்றப்படும் எனதேர்தல் அறிக்கையில் அறிவித்தது.இது நல்ல பலனைக் கொடுக்கும் என அக்கட்சி காத்துள்ளது. சபரிமலை விவகாரத்தை தொடர்ந்து பேசி, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மனநிலையில் இருந்த நடுநிலை இந்து வாக்காளர்களையும் அசைத்துப் பார்த்திருக்கிறது பாஜக. கூடவே பத்தனம்திட்டாவுக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியும், ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என முழக்கமிட்டார்.
களமாடும் சிறுபான்மையினர்
கேரளாவில் 115 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 10 தொகுதிகளை சிறுபான்மையினருக்கு ஒதுக்கியது. இதில் இரண்டு இஸ்லாமியர்களும் அடக்கம். இதுபோக குருவாயூர் தொகுதியில் பாஜக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் அங்கு இஸ்லாமிய சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தது. கேரளத்தில் 25 சதவீதம் இஸ்லாமியர் வாக்குகள் உள்ளது. அதனை ஈர்க்கும்வகையில் அனைத்து கட்சிகளின் சார்பில் 70-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அந்த ஓட்டத்தில் பாஜகவும் தன்னை இணைத்துக்கொண்டது.
இதேபோல் கேரளாவில் 20 சதவீதம்கிறிஸ்தவ வாக்குகள் உள்ளது. அந்தவகையில் 8 கிறிஸ்தவ வேட்பாளர்களையும் பாஜக களம் இறக்கியுள்ளது. அதில் அதிகம் கவனம் ஈர்ப்பவர் அனூப் ஆன்டணி. ஆலப்புழா மாவட்டத்தின் அம்பலப்புழா தொகுதியில் போட்டியிட்டு முடிவுக்காக காத்துள்ளார். 36 வயதான இவர் பொறியியல் பட்டதாரி. இத்துடன் சீரோ மலபார் திருச்சபையை சேர்ந்தவர் ஆவார்.
இவர் கிறிஸ்தவர் என்றாலும் விவேகானந்தா கேந்திரா, விவேகானந்தர் சர்வதேச அறக்கட்டளை ஆகியவற்றில் தீவிரமாக செயலாற்றினார். கடந்த 2011-ல்பாஜகவில் இணைந்தார் அனூப் ஆன்டணி. பாஜகவின் அறிவுசார் தளத்திலும் இயங்கிவரும் இவர், கடந்த 2017-ல் இளைஞர் பிரிவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். அனூப் போட்டியிட்ட அம்பலப்புழா தொகுதி, மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையாகும். கடந்த 14 தேர்தல்களில் இங்கு 9 முறை மார்க்சிஸ்ட் கட்சி வென்றுள்ளது.
கடந்த 2006 முதல் இத் தொகுதியில்ஜி.சுதாகரன் ஹாட்ரிக் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இருமுறைக்கு மேல்வென்றவர்களுக்கு இம்முறை சீட் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் எடுத்ததால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சிட்டிங் எம்எல்ஏஜி.சுதாகரனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியின் சலாம், காங்கிரஸ் கட்சியின் லிஜூ ஆகியோரை எதிர்த்து களம் கண்டார் அனூப். அம்பலப்புழாவில் பாஜகவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருவதும் அனூபை நம்பிக்கையுடன் முடிவுக்கு காத்திருக்க வைத்துள்ளது.
இந்தத் தொகுதியில் வெறும் மூன்று சதவீதமே இருந்த பாஜகவின் வாக்குவங்கி கடந்த 2016-ல் 17 சதவீதமாக உயர்ந்தது. அதற்குக் காரணம் ஈழவர் சமூக மக்களின் அரசியல் கட்சியான பி.டி.ஜே.எஸ் தான். பாஜக, பி.டி.ஜே.எஸ். கூட்டணியில் இருப்பதால் ஈழவர் சமூக வாக்குகளும் இந்தத் தொகுதியில் பாஜகவுக்கு கணிசமாக கைகொடுத்து வருகிறது. இத்தனைக்கும் கடந்தத் தேர்தலில் இங்கு சிறுபான்மையினர் ஆதரவை பாஜகவால் பெறமுடியவில்லை. இந்தமுறை சிறு பான்மை சமூக வேட்பாளரையே இறக்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அனூப் ஆன்டணி இந்து தமிழ் திசையிடம் கூறும்போது, “தொடக்கத்தில் எனக்கு இது கடினமான தேர்தலாகத்தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை மும்முனைப் போட்டியில் நான் முன்வரிசையில் நிற்கிறேன். இங்கு அதிகமாக கடற்கரை கிராமங்கள் உள்ளன. மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மீனவர்சுட்டுக் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எல்லை தாண்டியதாக எந்த நாட்டு சிறையிலும் கேரள மீனவர்கள் இல்லை. இதெல்லாம் சேர்த்து கடலோர கிராமங்களிலும் தாமரைக்கு நல்லவரவேற்பு இருப்பதை உணரவைத்தது.
இதேபோல் கேரளாவில் வலுவாக கிறிஸ்தவ வாக்குகள் உள்ளன. அவர்களுடன் பாஜக நல்ல உறவு வைத்துள்ளது. அவர்களுடன் மிகவும் நெருக்கமாக உரையாடுகிறோம். காங்கிரஸ், கிறிஸ்தவர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது. ஆனால் அக்கட்சியைகிறிஸ்தவர்கள் நிராகரித்து இருப்பதை இந்த தேர்தல்முடிவில் உணர்வீர்கள்” என்றார்.
இதேபோல் இறிஞ்சாலக்கூடா தொகுதியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜேக்கப் தாமஸ், காஞ்சிரப்பள்ளி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், மூவாட்டுப்புழா தொகுதியில் ஜிஜி ஜோசப், அரண்முலா தொகுதியில் பிஜு மேத்யூஉள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிட்டு முடிவுக்காக காத் துள்ளனர்.