ஜேட்லியை சாடும் கீர்த்தி ஆசாத் இடைநீக்கம்: பாஜக தலைவர் அமித் ஷா அதிரடி

ஜேட்லியை சாடும் கீர்த்தி ஆசாத் இடைநீக்கம்: பாஜக தலைவர் அமித் ஷா அதிரடி
Updated on
1 min read

பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாதை இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் அமித் ஷா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகார சர்ச்சையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை வெளிப்படையாக விமர்சித்து வரும் கீர்த்தி ஆசாத், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாஜக-விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் அதற்கு அளிக்கும் பதிலைப் பொறுத்து மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று பாஜக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தார்பங்கா எம்.பி. கீர்த்தி ஆசாத் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, அவரிடமிருந்து பதிலைப் பொறுத்து மேல் நடவடிக்கைகள் முடிவெடுக்கப்படும்” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று கட்சி உத்தரவுகளையும் மீறி செய்தியாளர்கள் சந்திப்பைக் கூட்டி அதில் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தை எடுத்துக் கூறினார் கீர்த்தி ஆசாத். இவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி, மற்றும் பாஜக அதிருப்தியாளர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ஆதரவு அளித்தனர்.

சத்ருகன் சின்ஹா, அருண் ஜேட்லி மீது கடுமையாக சாடியதோடு, முடிந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் என்று சமூக வலைத்தளத்தில் சவால் விடுத்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தை அம்பலப்படுத்த, கீர்த்தி ஆசாத்தும் அதில் இணைந்து கொண்டார். இதனையடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் 5 பேர் மீது ஜேட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் அவர் கீர்த்தி ஆசாத் மீது எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடிவெடுக்கவில்லை. ஆனால் கீர்த்தி ஆசாத் தனது அருண் ஜேட்லி மீதான விமர்சனத்தை தொடர்ந்து தக்கவைத்து வந்தார்.

இந்நிலையில் கீர்த்தி ஆசாத் அதிரடியாக தற்போது கட்சியிலிருந்து நீக்கி அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in