டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: கீர்த்தி ஆசாத் வலியுறுத்தல்

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: கீர்த்தி ஆசாத் வலியுறுத்தல்
Updated on
1 min read

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கீர்த்தி ஆசாத் எம்.பி. கோரியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில், 13 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்து அருண் ஜேட்லிக்கு தொடர்பு உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத்தும் இந்த குற்றச்சாட்டை எழுப்பினார். இதனால் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி ஆசாத் திங்களன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் மீது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட ராஜீவ் சுக்லா, நவீன் ஜிண்டால், அர்விந்தர் சிங் லவ்லி போன்றவர்கள் டெல்லி கிரிக்கெட் சங்க இயக்குநர்களாக பணியாற்றி இருந்தனர். அவர்களும் கடமை தவறி செயல்பட்டிருந்தனர்.

விளையாட்டு அமைப்புகளில் நடைபெறும் ஊழலை எதிர்த்துதான் நான் போராடுகிறேன். ஜேட்லிக்கு எதிராக அல்ல. நடைபெறாத பணிகளுக்கு போலி முகவரிகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் போடப்பட்டுள்ளது. ஒரே பணிக்காக அதே நபர்களுக்கு மீண்டும் மீண்டும் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. கட்சிக்கு எதிராகவோ, ஜேட்லிக்கு எதிராகவோ நான் எதுவும் கூறவில்லை. நான் எப்போதும் கட்சிக்கு விசுவமான தொண்டனாகவே இருந்து வருகிறேன். என்றாலும் ஊழலுக்கு எதிராக எனது போராட்டத்தை தொடருவேன்.

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் போன்ற மத்திய அமைப்புகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

கடும் முறைகேடு விசாரணை அலுவலகம் (எஸ்எப்ஐஓ) நடத்திய விசாரணையில் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் எதுவும் நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று பாஜக கூறுகிறது. எஸ்எப்ஐஓ தன்னிடம் வழங்கப்பட்ட அறிக்கைகளை மட்டுமே ஆய்வு செய்தது. கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் உண்மையில் உள்ளனவா என்று ஆராயவில்லை.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் சிபிஐ சோதனை நடத்தியபோதிலும் விளக்கம் கேட்டு சங்க நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது. இது குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

நான் 90 சதவீத விசாரணை முடித்துவிட்டேன். என்னிடம் இருந்து ஆதாங்களை சிபிஐ பெறலாம். சிபிஐ விசாரணை மிகவும் மந்தமாக நடைபெறுவது ஏன் என்று தெரியவில்லை.

டெல்லி கிரிக்கெட் சங்க தலைமை பொறுப்பில் ஜேட்லி இருந்தபோது, நடைபெற்ற நிதி முறைகேடுகள் குறித்து நானும் மற்றவர்களும் அவருக்கு 200-க்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதினோம். ஆனால் இதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இவ்வாறு கீர்த்தி ஆசாத் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in