

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக், சோபியான் மாவட்டங்களில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவங்களில் லஷ்கர் இ தொப்யா, அல் பதர் அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
அனந்த்நாக் மாவட்டம், கோரிவான் பீஜ்பேரா பகுதியில் வெள்ளிக்கிழமையன்று ராணுவவீரர் முகமது சலீம் அகூனை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று தப்பினர்.
அந்தத் தாக்குதல் சம்பவத்தோடு தேடப்பட்ட வந்த தீவிரவாதிகள் பீஜ்பெஹரா பகுதியில் உள்ள சேம்தான் எனும் கிராமத்தில் பதுங்கி இருந்தனர்.
சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து சரணடையக்கோரினர். ஆனால், தீவிரவாதிகள் மறுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இருவரின் பெயர் தவுசீப் அகமது பாட், அமீர் ஹூசைன் கானி எனஅடையாளம் தெரிந்தது, இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இதில் தீவிரவாதி அகமது பாட் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்தவர். இந்தத் தீவிரவாதிகளிடம் இருந்து ஏ.பி.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
சோபியான் மாவட்டத்தில் உள்ள சித்ராகிராம் காலன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த செய்தியையடுத்து நேற்று இரவு பாதுகாப்புப்படையினர் தேடுதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகளை சரணடைந்து விடுமாறு பாதுகாப்புப்படையினர் கேட்டுக்கொண்டனர்.
ஆனால், அவர்கள் சம்மதிக்காமல் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஆசிப்அகமது, பைசல் குல்சார் கானி ஆகியஇரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதில் பைசலுக்கு 18 வயதுக்குள்ளாகவே இருக்கும். சமீபத்தில் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சி எடுத்தவர். கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் அல்-பதர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.