

மேற்கு வங்க மாநிலம், கூச் பெஹர் சித்லாகுச்சியில் நடந்தது இனப்படுகொலை. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களைச் செல்லவிடாமல் 72 மணிநேரம் தடைவிதித்து, உண்மைகளை மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என்று முதல்வரும்,திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் 4ம் கட்டத் தேர்தல் 44 தொகுதிகளுக்கு நேற்று நடந்தது. கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது மக்களில் ஒரு தரப்பினர் மத்தியப் படையினர் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பிடுங்கவும், அவர்களைத் தாக்கவும் முயன்றனர். இதனால், தற்காப்புக்காக மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து வன்முறை நடந்த கூச்பெஹார் மாவட்டத்துக்குள் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நுழைய 72 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தசம்பவம் குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நிருபர்களுக்குப்ப பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாநிலத்தில் 4-வது கட்டத் தேர்தல் நேற்று நடந்தபோது, சித்லாகுச்சி பகுதியில் பொதுமக்களைக் குறிவைத்து மத்தியப்படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சித்லாகுச்சியில் நடந்தது இனப்படுகொலை. வரும் 14-ம் தேதி சித்லாகுச்சிக்குச் செல்ல இருக்கிறேன்.
ஆனால், கூச் பெஹர்மாவட்டத்துக்குள் எந்த அரசியல்கட்சித் தலைவரும் 72 மணிநேரத்துக்கு செல்லவிடாமல் தடை விதித்து, தேர்தல் ஆணையம் உண்மைகளை மறைக்க முயல்கிறது.நாம் திறமையற்ற உள்துறை அமைச்சரையும், திறனற்ற மத்திய அரசையும் வைத்திருக்கிறோம்.
மத்திய சிஐஎஸ்எப் படையினருக்கு எவ்வாறு சூழல்களைச் சமாளிப்பது எனத் தெரியவில்லை. முதல் கட்டத் தேர்தலில் இருந்து, மக்கள் மீது மத்தியப்படையினர் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறேன்.
நந்திகிராமத்தில் இந்த விஷயத்தை நான் எழுப்பினேன், யாரும் என் வார்த்தைகளை கண்டு கொள்ளவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் பலியான ஒருவரின் குடும்பத்தாருடன் நான் காணொலி மூலம் பேசினேன். அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளேன்.
வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஜவான்கள் சுட்டுள்ளனர். கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருடன் நான் கானொலியில் பேசியபோது, உயிரிழந்தவரின் மனைவி கர்ப்பணி எனத் தெரியவந்தது, 3 வயதில் குழந்தையும் உள்ளது. பெற்றோர், மனைவி அதிர்ச்சியில் உள்ளனர்.
தேர்தல் பொதுக்கூட்டத்தில் நான் கனத்த இதயத்துடன்தான் பேசப்போகிறேன். என்னை மிகவும் வேதனைப்படுத்திகறது
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.