Last Updated : 11 Apr, 2021 12:09 PM

 

Published : 11 Apr 2021 12:09 PM
Last Updated : 11 Apr 2021 12:09 PM

பாஜகவுக்கு சவாலாகிவிட்ட உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தல்: தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள் 

உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தல் அங்கு ஆளும் பாஜகவுக்கு சவாலாகிவிட்டது. இத்தேர்தல் உ.பி.யில் வரும் 2022 இல் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாகக் கருதப்படுவதால் அதன்மீது எதிர்க்கட்சிகள் அதிகத் தீவிரம் காட்டுகின்றன.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் பஞ்சாயத்து தேர்தல் அதன் சட்டப்பேரவைக்கு முன்னோட்டமாக உள்ளது. இதன் முடிவுகளின் தாக்கம் அடுத்த சில வருடங்களில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இருக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதனால், நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உபியில் நடைபெறும் பஞ்சாயத்துத் தேர்தலில் அம்மாநில அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன. இங்கு முதன்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆளும் பாஜகவுக்கு, பஞ்சாயத்து தேர்தல், பெரும் சவாலாகி விட்டாது.

இத்தேர்தலில் பாஜக, உபி கிராமங்களில் தனது செல்வாக்கை மேலும் உயர்த்த முயற்சிக்கிறது. இதற்காக, கிராமங்களின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தனது மாவட்ட அளவிலான மூத்த தலைவர்களை ஏஜெண்ட்டுகளாக பாஜக அமர்த்தி உள்ளது.

ஏனெனில், உபியின் நகர்ப்புறக் கட்சியாகவே பாஜகக் கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் தனது எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்டோரின் செல்வாக்கை வீழ்த்த வேண்டி உள்ளது.

இதற்கு சாதகமாக கடந்த 2014, 2017 மற்றும் 2019 என தொடர்ந்து நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிர்கட்சிகளுக்கு ஏற்பட்ட தோல்வி அமைந்துள்ளது. இத்துடன், டெல்லியில் துவங்கிய விவசாயிகள் போராட்டமும் பாஜகவை பயமுறுத்துகிறது.

போராட்டக் களத்திலுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி.,யில் விவசாயிகள் பாஜகவிற்கு எதிராக மஹாபஞ்சாயத்துக்களை நடத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

உ.பி.,யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் கடந்த ஒரு மாதகாலமாக மாநிலம் முழுவதிலும் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிவிட்டார். இதில், இதுவரை இல்லாத வகையில் சுமார் நாற்பதிற்கும் மேற்பட்டக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இப்பிரச்சாரத்தில் பல்வேறு பகுதிகளில் இரவிலும் அகிலேஷ் தங்கி பொதுமக்களின் செல்வாக்கைப் பெறும் முயற்சியில் உள்ளார். இவற்றில் இந்துக்களின் கோயில்கள், முஸ்லிம்களின் தர்காக்கள் மற்றும் புத்த சமயத்தினரின் புனிதத்தலங்கள் என அனைத்திலும் தவறாமல் வழிபாடுகளையும் நடத்துகிறார்.

இக்கூட்டங்களின் மூலம் 2022 சட்டப்பேரவை தேர்தலையும் குறி வைத்துள்ள அகிலேஷ், ஆங்காங்கே சைக்கிள் யாத்திரைகளும் நடத்தி வருகிறார்.

மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜின் தலைவரான மாயாவதியும் தனது நேரடி கவனத்தை பஞ்சாயத்து தேர்தலில் செலுத்தி வருகிறார். தனது முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் தலைமையில் கிராமந்தோறும் குழுக்களை அமைத்துள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் தன் முக்கிய எதிரியான சமாஜ்வாதியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது.

உ.பி.,யின் 80 தொகுதிகளில் மாயாவதி 38, அகிலேஷ் 37 எனப் போட்டியிட்டனர். இதில் மாயாவதிக்கு சமாஜ்வாதியை விட அதிகமான வாக்குகளுடன், இருமடங்கு தொகுதிகளாகப் பத்து தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.

இதனால், இந்தமுறை உ.பி., பஞ்சாயத்து தேர்தலில் தீவிரம் காட்டி 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்ல மாயாவதி முனைப்பு காட்டுகிறார். உ.பி.,யில் தனது சரிவு நிலையை சமாளிக்க காங்கிரஸ் பிரியங்கா வத்ராவை கடந்த 2019 மக்களவை தேர்தலில் இறக்கியது.

இம்மாநிலத்தின் கட்சிப் பொறுப்பாளரான பிரியங்கா, பஞ்சாயத்து தேர்தலில் தீவிரம் காட்டுகிறார். இதற்காகப், போராடும் விவசாயிகள் நடத்தி வரும் மஹாபஞ்சாயத்து கூட்டங்களிலும் அவர் தவறாமல் கலந்து கொள்கிறார்.

ஏப்ரல் 15 முதல் நான்கு கட்டங்களாக நடைபெறவிருக்கும் உ.பி., பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் மே 2 இல் வெளியாகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x