Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று கூறினேனா?- திரிணமூலுக்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்கு சவால்

புதுடெல்லி

‘‘நான் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் பாஜக வெளியிட்டுள்ளது. தைரியம் இருந்தால் முழு ஆடியோவையும் வெளியிட வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்துள்ள அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில், நேற்று 4-வது கட்ட தேர்தல்நடைபெற்றது. இந்தத் தேர்தலில்மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜக.வும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தேர்தல்வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளஆடியோ செயலியான (ஆப்) கிளப்ஹவுஸில் சில பத்திரிகையாளர்களுடன் பிரசாந்த் கிஷோர் உரையாடி உள்ளார். அப்போது நடந்தஉரையாடலின் போது, மேற்கு வங்கத்தில் பாஜக.வுக்கு ஆதரவு அதிகம் இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார் என்று பாஜக. மூத்த தலைவரும் கட்சியின் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளருமான அமித் மால்வியா ட்விட்டரில் கூறினார். அதற்கு ஆதாரமாக பிரசாந்த் கிஷோர் பேசியஆடியோவையும் அவர் நேற்றுகாலை வெளியிட்டார். ‘‘கிளப் ஹவுஸில் பத்திரிகையாளர்களுடன் நடந்த உரையாடல், தனிப்பட்ட முறையில் நடைபெறவில்லை. அந்த உரையாடல் பதிவு செய்யப்படுகிறது என்பது கூட அறியாமல் பிரசாந்த் கிஷோர் நிறைய பேசி இருக்கிறார்’’ என்று ட்விட்டரில் அமித் மால்வியா பதிவிட்டார்.

அந்த ஆடியோவில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது:

மம்தா பானர்ஜி அரசு மீதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம்,திரிணமூல் அரசின் சிறுபான்மையினருக்கு ஆதரவான போக்கு, தலித் வாக்குகள் ஆகிய 3 முக்கியகாரணங்கள் பாஜக.வுக்கு சாதகமாக உள்ளன. மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், மத்திய அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை.

மோடிக்காகவும், இந்துக்கள் என்ற முறையிலும், சிறுபான்மையினருக்கு ஆதரவான திரிணமூல் காங்கிரஸின் போக்கும் பாஜக.வுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளன. இவற்றில் 27 சதவீதம் உள்ள தலித்துகளின் வாக்குகளும் பாஜக.வுக்கு சாதகமாக உள்ளது. இந்தி பேசும் மக்கள் மேற்கு வங்கத்தில் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளனர். இவை எல்லாம் பாஜக.வுக்கு சாதகமான அம்சங்கள். மோடி இங்கு மிகவும் பிரபலமாக இருக்கிறார்.

வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கத்துக்கு அகதிகளாக வந்து தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட மதுவா இனத்தவர்களில் 75 சதவீதம் பேர் பாஜக.வுக்கு வாக்களிப்பார்கள். 25 சதவீதம் பேர் திரிணமூல் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள். நாங்கள் எடுத்த சர்வேயில் கூட பாஜக.தான் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர். பாஜக.வினர், பாஜக.தான் ஆட்சி அமைக்கும் என்பார்கள். இடதுசாரிகளில் கூட மூன்றில் இரண்டு பங்கினர், பாஜக.தான் ஆட்சி அமைக்கும் என்று நம்புகின்றனர். 50 முதல் 55 சதவீத இந்துக்கள் பாஜக.வுக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் சொல்லும் போது ஆடியோ முடிகிறது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமித் மால்வியா வெளியிட்ட ஆடியோ கிளிப்பிங்கை ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பிரசாந்த் கிஷோர் நேற்று கூறியதாவது:

நான் பேசியதில் குறிப்பிட்ட சில பகுதி அடங்கிய ஆடியோவை மட்டும் பாஜக வெளியிட்டுள்ளது. தைரியம் இருந்தால் கிளப் ஹவுஸில் நான் பேசிய முழு ஆடியோவையும் பாஜக வெளியிட வேண்டும். எனினும், அவர்களது கட்சி தலைவர்கள் சொல்வதை விட, நான் பேசியதை பாஜக நிர்வாகிகள் மிக முக்கியமானதாக எடுத்துக் கொண்டது மகிழ்ச்சிஅளிக்கிறது. நான் பேசியதில் சிலவற்றை மட்டும் பயன்படுத்தி பாஜக நிர்வாகிகள் உணர்ச்சிவசப்படுவதை விட்டுவிட்டு, முழு ஆடியோவையும் வெளியிட வேண்டும். இப்போது மீண்டும் சொல்கிறேன். மேற்குவங்க தேர்தலில் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

பலத்த சந்தேகம்

பிரசாந்த் கிஷோர் நிறுவனம் ஏற்கும் சவால் என்பதே, ஒரு பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவதுதான். அப்படி இருக்க, பாஜக.வுக்கு மேற்கு வங்கத்தில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கிஷோர் கூறியுள்ளது போல் செய்திகள் வெளியாவது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.பிரசாந்த் கிஷோரின் வளர்ச்சிக்கான ஆரம்பமே மோடியிடம் இருந்துதான் என்பதால், திரிணமூல் காங்கிரஸ் தரப்புக்கு இந்த உரையாடல் பதிவு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x