

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய பருவா எழுதிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற புத்தகம் காங்கிரஸ் கட்சியிலும், டெல்லி அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை தயார் நிலையில் இருக்கிறது.
முன்னாள் வெளியுறவு அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நட்வர் சிங்கின் ஒன் லைப் இஸ் நாட் இனஃப் (One Life is Not Enough ) என்ற சுயசரிதை நூல் வரும் ஆகஸ்டில் வெளியாக இருக்கிறது.
இந்த நூல் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இப்புத்தகத்தில் நட்வர் சிங், ஒரு தூதராக தன் ஆரம்ப காலகட்டம் பற்றியும், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோருடன் தனக்கு இருந்த நெருக்கம் குறித்தும் விரிவாக எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ராஜீவ் கொலைக்குப் பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விவரித்திருப்பதாக தெரிகிறது. 1991-ல் நரசிம்ம ராவும், 2004-ல் மன்மோகன் சிங்கும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
2004- 05 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர் சிங் இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால், எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து வோல்கர் அறிக்கை வெளியான பிறகு, நட்வர் சிங் அவரது பதவியை துறக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.
நட்வரின் புத்தகம்: ஒரு உட்தகவல் அரசியல்வாதியின் உச்சபட்ச அறிக்கை
உட்தகவல் அரசியல்வாதிகள் எழுதிய சுயசரிதைகளின் வரிசையில் வெளிவரவுள்ள நட்வர் சிங்கின் ஒன் லைப் இஸ் நாட் இனஃப் புத்தகம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் பருவத்தில் என்ன நடந்தது, அரசாங்கத்தை இயக்குவதில் மன்மோகன் - சோனியா இடையே இருந்த சமன்பாடு என்ன ஆகியவை விளக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. காந்தி குடும்பத்தின் விசுவாசியாக, மன்மோகன் சிங் அமைச்சகத்தின் முக்கிய அமைச்சராக, ஒரு உட்தகவல் அரசியல்வாதியாக அவரது பார்வை இப்புத்தகத்தில் விரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வெளியுறவு அமைசராக, 2004- 05 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர் சிங் இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
அவரது பங்களிப்பு குறித்து அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், 'நட்வர் சிங் உதவி மட்டும் கிடைத்திராவிட்டால் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றிருக்க முடியாது' என குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் புத்தகத்தில் ஒரு இடத்தில், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக மன்மோகன் சிங் தீர்மானித்திருந்தது குறித்தும், நட்வர் சிங்கும் தானும் விடாப்பிடியாக அதை சாத்தியப்படுத்த ஒன்றுபட்டு முயற்சி செய்தது தொடர்பாகவும் பதிவு செய்திருந்தார்.
இந்த வரிசையில், நட்வர் சிங் புத்தகம் இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்த மேலும் பல நுட்பமான தகவல்களை அளிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆனால், எண்ணெய்க்கு உணவு திட்ட ஊழல் குறித்து அமெரிக்காவின் பால் வோல்கர் அளித்த அறிக்கையில் நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி தொடர்பு குறித்து அம்பலப்படுத்தியது நட்வருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
நலத்திட்டங்கள் போர்வையில் பொருளாதார தடையில் இருந்து ஈராக் அதிபர் சதாம் உசைன் தப்பிக்க உலகளவில் உதவியவர்கள் பற்றிய அறிக்கையை பால் வோல்கர் வெளியிட்டார்.
2005-ல் லோல்கர் அறிக்கை வெளியான பிறகு, பதவியைத் துறந்த நட்வர் சிங் அதன் பின்னர் வேறு எந்த ஒரு பொறுப்பிலும் பணி அமர்த்தப்படவில்லை. கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.
நட்வர் சிங் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி பதக் கமிஷன் அளித்த அறிக்கையில் நட்வர் சிங்குக்கும், அவரது மகன் ஜக்ஜித் சிங்குக்கும் சதாம் அரசுடன் உறவு இருந்தது உண்மை என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அமலாக்கப் பிரிவினர் விரிவான விசாரணைக்குப் பிறகு கூட நட்வர் சிங் நிதி ஆதாயம் அடைந்ததாக உறுதி செய்ய முடியாமல் போனது.
நட்வர் சிங், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது போல், காங்கிரஸ் கட்சி விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இதனால் நட்வர் சிங் கட்சியின் மீது அதிருப்து அடைந்தார். எந்த கட்சியில் தன்னை 35 ஆண்டுகளாக தீவிரமாக இணைத்துக் கொண்டிருந்தாரோ அந்தக் கட்சியில் இருந்து 2008-ல் விலகினார்.
நட்வர் சிங், அதன் பின்னர் தொடர்ந்து காங்கிரஸ் அரசை விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சுயசரிதை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க நட்வர் சிங் மறுத்துவிட்டார்.