

இந்தியாவில் சுமார் ரூ.10 லட்சம் கோடியில் 6 அணு உலைகளை அமைப்பது தொடர்பாக அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனியுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணு உலைகள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மிதி விர்தியில் அமைய உள்ளது. இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துக்கும் (என்பிசிஐஎல்) வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்துக்கும் இடையே பலசுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அரசு வட்டாங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் நாட்டின் அணுமின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்ற விளைவை தடுக்கவும், பசுமைக்குடில் எரிவாயு உருவாக்கத்தைத் தடுக்கவும், பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை தடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, இப்போது 5,780 மெகாவாட்டாக உள்ள அணு மின் உற்பத்தியை 2032-ம் ஆண்டுக்குள் 63 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்க சுமார் 60 அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2-வது பெரிய அணுசக்தி சந்தையாக இந்தியா உருவெடுக்கும்.
அணு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வரும் இந்தியாவுக்கு அணு மின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்துக்கு இருந்துவந்த தடை நீங்கியது.
இதற்கிடையே, அணு உலைகளில் ஏற்படும் விபத்துக்கு அதை சப்ளை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கோர இந்திய அணுசக்தி கழகத்துக்கு உரிமை வழங்க வகை செய்யும் சட்டம் கடந்த 2010-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இது அணு உலை சப்ளை நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, இந்தப் பிரச்சினைக்கு காப்பீடு மூலம் தீர்வு காண ரூ.1,500 கோடி நிதியத்தை உருவாக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.