மத்தியப் பாதுகாப்புப் படைக்கு எதிராக மக்களை மம்தா பானர்ஜி தூண்டி விடுகிறார்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சிலிகுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ.
சிலிகுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ.
Updated on
2 min read

''மத்தியப் பாதுகாப்புப் படைக்கு எதிராக மம்தா பான்ரஜி மக்களைத் தூண்டி விடுகிறார். துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியான விவகாரத்தில் யார் பொறுப்பானவர்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்'' என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் 4-வது கட்டமாக இன்று 44 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின்போது மக்களில் ஒரு தரப்பினர் மத்தியப் படையினர் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பிடுங்கவும், அவர்களைத் தாக்கவும் முயன்றனர். இதனால், வேறு வழியின்றி தற்காப்புக்காக மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இன்று காலை ஒருவர் சித்லாகுச்சி தொகுதியில் வாக்களிக்க நின்றிருந்த போது அடையாளம் தெரியாத நபரால் கொல்லப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மேற்கு வங்கத்தின் வடபகுதியில் உள்ள சிலிகுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

''கூச்பெஹர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் மிகவும் வேதனையானது. துரதிர்ஷ்டமானது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 5 பேருக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

சகோதரி மம்தாவும் அவரின் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களும் பதற்றமடைந்துள்ளனர். ஏனென்றால், மக்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளது. மத்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகச் செயல்படவும், தாக்குதல் நடத்தவும் மம்தா பானர்ஜி மக்களைத் தூண்டி விடுகிறார். மக்களுக்கு சகோதரி மம்தாதான் உத்தரவிடுகிறார்.

நமது துணிச்சல் மிகுந்த வீரர்களை இப்படித்தான் நடத்துவீர்களா? இந்த அளவோடு மம்தா நிறுத்திக்கொள்ள வேண்டும். அவரின் நாற்காலி மெல்ல நழுவிச் செல்வதை அவர் பார்க்கமுடியும்.

சகோதரி மம்தா, வன்முறைச் சம்பவம் என்பது மக்களைத் தூண்டிவிட்டு, மத்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமும், தேர்தலைச் சீர்குலைக்கும் திட்டம்தானே. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஆட்சியிலிருந்து இறங்கிவிட்டீர்கள். ஆனாலும், மத்தியப் படைகளை கெரோ செய்யுங்கள், தாக்குதல் நடத்துங்கள் என்று மக்களைத் தூண்டிவிடுகிறீர்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக ஏழைகளைத் துன்புறுத்திய குண்டர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் மீது மம்தாவுக்குக் கோபம் வரவில்லை. ஆனால், மேற்கு வங்க மக்களின் உரிமைகளைக் காக்கும் பாதுகாப்புப் படையின் மீது கோபம் வருகிறது. வன்முறை கலாச்சாரத்தில் மம்தா நம்பிக்கை கொண்டவர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும் எண்ணத்துக்கு மக்கள் வந்துவிட்டார்கள்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in