Last Updated : 10 Apr, 2021 04:03 PM

 

Published : 10 Apr 2021 04:03 PM
Last Updated : 10 Apr 2021 04:03 PM

அமித் ஷா பதவி விலக வேண்டும்: மத்தியப் படைகள் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியை அடுத்து மம்தா வலியுறுத்தல்

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ.

ஹின்கான்கஞ்

மேற்கு வங்கத்தில் கூச்பெஹார் மாவட்டம் சிதால்குச்சி தொகுதியில் சிஆர்பிஎப் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 4-வது கட்டமாக இன்று 44 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை முதல் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வந்தது. கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இன்று நடந்து கொண்டிருந்தது.

அப்போது, திடீரென பாஜகவினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைக் கலைக்கும் பணியில் போலீஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மக்களில் ஒரு தரப்பினர் மத்தியப் படையினர் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பிடுங்கவும், அவர்களைத் தாக்கவும் முயன்றனர்.

இதனால், வேறு வழியின்றி தற்காப்புக்காக மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து வடக்கு 24 பர்கானாவில் உள்ள பதூரியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

''மத்தியப் படைகள் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும். மத்தியப் படையினர் செய்துவரும் செயல்களை எல்லாம் நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.

4 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்காப்புக்காகத்தான் சுட்டோம் என்று மத்தியப் படைகள் கூறுகின்றன. இதுபோன்ற பொய்களைக் கூறுவதற்கு தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.

சிதால்குச்சி தொகுதியில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மக்களின் ஆதரவை இழந்துவிட்டோம் என பாஜகவுக்குத் தெரிந்துவிட்டதால், மக்களைக் கொல்லும் சதியில் ஈடுபடுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் சதியின் ஒருபகுதிதான் இது.

நான் அனைவரிடமும் கேட்பது என்னவென்றால், பொறுமையகவும், அமைதியாகவும இருந்து வாக்களியுங்கள். கொல்லப்பட்ட 4 பேருக்குப் பழிவாங்குதல் என்பது தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதுதான். தேர்தல் தொடங்கியதிலிருந்து எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என எண்ணிப் பாருங்கள். ஏறக்குறைய 18 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 12 பேர் நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்.

நாங்கள் இப்போது நிர்வாகத்திலும், அதிகாரத்திலும் இல்லை, தேர்தல் ஆணையம்தான் அதிகாரத்தில் இருக்கிறது''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட 126-வது மையம்.

இதற்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்த சித்லாகுச்சி தொகுதியில் உள்ள 126 வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் அளித்த இடைக்கால அறிக்கையை அடுத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x