

டெல்லியில் குரங்குகளை காட்டி ஒரு கும்பல் வழிப்போக்கர்களை அச்சுறுத்தி வழிப்பறி செய்துள்ளது. இவர்கள் மீது ஒரு வழக்கறிஞர் செய்த புகாரின் பேரில் அக்கும்பலை காவல்துறையின் சிறப்பு பிரிவு கைது செய்துள்ளது.
இந்த கும்பல் சிராக் டெல்லியிலுள்ள ஒரு மேம்பாலத்தில் முகாமிட்டு பணம் பறிக்கும் வேலையை செய்துள்ளது. இந்த பாலத்தில் நடையாகவும், பல்வேறு வாகனங்களிலும் பொதுமக்கள் கடந்து செல்கிறார்கள்.
இவர்களை பாலத்தின் மீது மடக்கும் ஒரு கும்பல், தாம் வளர்த்து வைத்துள்ள குரங்குகளை காட்டி அது பொதுமக்களை கடிக்கும் வகையில் மிரட்டி வந்துள்ளனர். இதற்கு அச்சப்படுபவர்களிடம் பைகளில் உள்ள பணத்தை பறித்து வந்துள்ளனர்.
இல்லையேல், குரங்குகளின் கழுத்தை கட்டி வைத்துள்ள கயிற்றை தம் கைகளிலிருந்து அவிழ்த்து விட்டு விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளனர். இவ்வாறு, பணத்தை பறிகொடுப்பவர்களில் பலரும் எந்த புகாரும் செய்யாமல் இருந்து வந்துள்ளனர்.
பல நாட்களாக இரவிலும், பகலிலும் நடைபெற்ற வந்த வழிப்பறியில் ஒரு டெல்லியின் மாளவியா நகரை சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் சிக்கியுள்ளார். இவர்களிடம் ரூ.6000 பறிகொடுத்தவர், தைரியமாக டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் சென்று புகார் அளித்துள்ளார்.
இதன் பெயரில் டெல்லி காவல்துறையில் சிறப்பு பிரிவினர் வியூகம் அமைத்து மாறுவேடத்தில் சிராக் டெல்லியின் பாலத்தை கடந்துள்ளனர். அப்போது அவர்களிடமும் பணம் பறிக்க முயன்ற அக்கும்பலை நேற்று கையும், களவுமாகப் பிடித்து கைது செய்யப்பட்டுள்ளது.
இரண்டு குரங்குகளுடன் பல்வன் நாத்(26) மற்றும் விக்ரம் நாத்(26) எனும் இருவர் கைதாகி உள்ளனர். இவர்களின் மற்றொரு சகாவான அஜய் நாத் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
வழக்கமாக கைகளில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செய்து வந்த வழிப்பறி உருமாறி முதன்முறையாக குரங்குகளை பயன்படுத்தி மிக எளிதாக வழிப்பறி செய்திருப்பது காவல்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.