கரோனா வைரஸ் பரவல்: காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன்  சோனியா காந்தி இன்று ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி : கோப்புப்படம்
Updated on
1 min read

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

கரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1.45 லட்சம் பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி போதுமான அளவில் இருப்பு இல்லை சில நாட்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்றும், பற்றாக்குறை நிலவுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளன.

குறிப்பாக மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், பிஹார் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது

இதையடுத்து, நாட்டில் கரோனா வரைஸ் பரவல், தொற்றைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்த வேண்டும், தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்றுக் கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று கரோனா வைரஸ் பரவல் குறித்து ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. ராஜஸ்தானில் நோய் தொற்றைத் தடுக்க, வரும் 30ம் தேதிவரை இரவு நேர ஊரடங்கை முதல்வர் அசோக் கெலாட் பிறப்பித்துள்ளார்.

அஜ்மீர், ஆல்வார், பில்வாரா, சித்தோர்கர், துங்கார்பூர், ஜெய்பூர், ஜோத்பூர், கோட்டா, அபுசாலை ஆகிய மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு பிறப்பி்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் வரும் 30-ம் தேதிவரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in