

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நிலையிலும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
கரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் அதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட அரசியல் பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தியில், ‘‘கரோனா அறிகுறியுடன் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மார்ச் 7-ம் தேதியன்று மோகன் பகவத் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதாகும் மோகன் பகவத்திற்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.