

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு.
வேளாண் சந்தையில் விவசாயிகளுக்கு முழுமையான விலை சென்று சேர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இடைத்தரகர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஆனால், பஞ்சாப் அரசு இடைத்தரகர்கள் வழியாக விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கும் முறையைத் தொடர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பஞ்சாப் மாநில நிதி மற்றும் உணவுத் துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அந்தச் சந்திப்பில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக குறைந்தபட்ச ஆதார விலையைச் செலுத்துவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்தாவிட்டால் பஞ்சாபிடமிருந்து வேளாண் பொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்யாது என்றும் பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் இடைத்தரகர்களுக்கு தனியாக 2.5 சதவீத கமிஷன் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்றராபி பருவத்திலிருந்து இந்த பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் நில ஆவணத்தின் நகலை ஊராட்சி நிர்வாகியிடம் கையெழுத்து பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறலாம். 48 மணி நேரத்தில் இந்தப் பரிவர்த்தனை செயல்படுத்தப்படும்.
மேலும் ஆறு மாதங்களில் விவசாயிகளின் விளைநில விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.