

உத்தராகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட 51 கோயில்களை அரசு நிர்வகிக்கும் என்ற உத்தரவை முதல்வர் தீரத் சிங் ராவத் ரத்து செய்துள்ளார்.
உத்தராகண்டில் பாஜக ஆட்சிநடைபெறுகிறது. அங்கு முதல்வராக பதவி வகித்த திரிவேந்திர சிங் ராவத், சார் தாம் தேவஸ்தானம் நிர்வாக மசோதாவை சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றினார். இதற்கு ஆளுநர் பேபி ராணி மவுரியாவும் ஒப்புதல் வழங்கினார்.
இந்த புதிய சட்டத்தின்படி, பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட 51 முக்கிய கோயில்களை நிர்வகிக்க தனி வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பண்டிதர்கள், சாதுக்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் இந்த புதிய சட்டத்தை திரும்பப் பெற உத்தரவிட வலியுறுத்தி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். முன்னதாக இந்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே, உட்கட்சி பூசல் காரணமாக திரிவேந்திர சிங் ராவத் சமீபத்தில் பதவி விலகினார். இதையடுத்து, புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் பதவியேற்றார். புதிய முதல்வரை சந்தித்த இந்து அமைப்புகள், கோயில்களை அரசு நிர்வகிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன.
இந்நிலையில், முதல்வர் தீரத் சிங் ராவத் நேற்று கூறும்போது, “சார் தாம் தேவஸ்தான வாரியம் அமைப்பது தொடர்பான முடிவு மறுபரிசீலனை செய்யப்படும். 51 கோயில்களை அரசு நிர்வகிக்கும் என்ற முடிவு ரத்து செய்யப்படும்” என்றார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறும்போது, “உத்தராகண்ட் அரசின் கோயில்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதுதான் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் அரசு” என்றார்.