உத்தர பிரதேசத்தில் எமன் வேடத்தில் நாடக கலைஞர் கரோனா விழிப்புணர்வு

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் எமன் வேடமணிந்த நாடக கலைஞர் பானு ரத்தோர், கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் எமன் வேடமணிந்த நாடக கலைஞர் பானு ரத்தோர், கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் எமன் வேடமணிந்த நாடக கலைஞர், கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உத்தர பிரதேசத்தில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று முன்தினம் 8,474 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மொராதாபாத் நகரில் நேற்று எமன் வேடமணிந்த நாடக கலைஞர் பானு ரத்தோர், வீதி வீதியாக சென்று கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். எமன் போன்று தங்க நிற தலைக்கவசம், கருப்பு நிற ஆடை, எருமை மாடு ஆகியவற்றுடன் மொராதாபாத்தின் பிராஸ்நகரில் ஒலிபெருக்கி மூலம் அவர் மக்களிடம் பேசினார்.

"நான் எமதர்மன். கரோனா வைரஸ் தடுப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்றுங்கள். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பூமியில் வாழும் மக்கள் எனது பணிச் சுமையை அதிகரிக்க செய்ய வேண்டாம்" என்று அவர் கூறினார். நாடக கலைஞர் பானு ரத்தோர், எமன் வேடத்தில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in