

மே.வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (ஏப்.10) நடைபெறுகிறது.
மேற்கு வங்க தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடந்து வருகிறது. இவற்றில் 3 கட்ட தேர்தல் முறையே மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதி களில் நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இதுவரை 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது.
இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஹவுரா, ஹூக்ளி, கூச்பெஹார், தெற்கு 24 பர்கானாஸ் , அலிப்பூர்துவார் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே 15 லட்சத்து 81,022 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 15,940 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன.
மத்திய அமைச்சர் புபுல் சுப்ரியோ, மேற்குவங்க அமைச்சர் கள் பார்த்தா சாட்டர்ஜி, அரூப் விஸ்வாஸ், பாஜக எம்.பி.க்கள் லாக்கெட் சாட்டர்ஜி, நிசித் பிரமானிக் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.