

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியை பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்தர் மோடி, தன்னிடமிருந்து பறித்துவிடாமல் இருக்க அதன் தற்போதைய எம்பியான முரளி மனோகர் ஜோஷி முயற்சி மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான ஜோஷி தொடர்ந்து இரண்டுமுறை வென்ற அலகாபாத்தில் 2004-ல் தோற்கடிக்கப்பட்டதால் வார ணாசிக்கு மாற்றப்பட்டார். இங்கு 2009-ல் வென்றவரிடம் இருந்து தொகுதியை பறித்து மோடிக்கு அளிக்க பாஜக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்கும் முயற்சியில் இறங்கி விட்டார் ஜோஷி.
இதற்காக ஜோஷியின் மனைவி சரளா ஜோஷி கடந்த பிப்ரவரி 20-ல் வாரணாசியின் ஆர்டர்லி பஜாரில் தேர்தல் அலுவலகம் திறந்துவைத்தார். உள்ளுர் இந்தி நாளிதழ்களில் ஜோஷியின் எம்பி பணிகளை அடுக்கி விளம்பரங்களும் வெளி யிடப்பட்டன. வரும் 17-ம் தேதி கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாஜகவின் தாமரை சின்னத்துடன் ஜோஷியின் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
இது குறித்து தி இந்துவிடம் ஜோஷியின் ஆதரவாளர்கள் கூறியபோது, ‘மோடிஜியை இங்கு போட்டியிட வைப்பதாக முதன்முதலில் கேள்விப்பட்ட உடன் அதிர்ச்சி அடைந்தார் ஜோஷி. ஏனெனில், அவர் இந்த தொகுதிவாசிகளுக்காகப் பல நற்பணிகளை செய்துள்ளார். இவை, அவரது வெற்றியை உறுதி செய்யும் நிலையில் அவரை கான்பூர் அல்லது அலிகருக்கு மாற்ற முயல்வது நியாயம் அல்ல” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், மோடியின் ஆதரவாளர்களும் அவருக்கான பிரச்சாரத்தில் ஈடுபடத் தயாராகி விட்டனர். இங்கு மோடியை வேட்பாளராக அறிவிக்கக் கோரி கையெழுத்து முகாம்கள் நடத்தி டெல்லியிலுள்ள தலைமைக்கு அனுப்பியுள்ளனர். இதனால், வாரணாசியில் ஜோஷி மற்றும் மோடியின் ஆதரவாளர்களுக்கு இடையே கருத்து மோதல் உருவாகத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, மோடியின் பெயரை வேட்பாளர் பட்டியலில் அறிவிப்பது குறித்து பாஜக தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தி இந்துவிடம் தெரிவித்துள்ளன.
பாஜக தலைமையகத்தில் சனிக்கிழமை கூடிய கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் வாரணாசி யில் போட்டியிட மோடியின் பெயரை ராஜ்நாத் சிங் பரிந்துரைத்ததாகவும் இதை சுஷ்மா ஸ்வராஜ் எதிர்த்து ஜோஷிக்கு ஆதரவாக பேசியதாகவும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக வாரணாசி வேட்பாளர் அறிவிப்பை சற்று ஒத்திவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை நிறுத்த வேண்டும் என அந்தக் கட்சியில் குரல்கள் எழும்பியுள்ளன.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங், ‘ஆம் ஆத்மியின் மீது பாஜகவிற்கு உண்மையிலேயே பயம் இல்லை எனில், மோடி போட்டியிடும் தொகுதியை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு ஏற்றவாறு ஆம் ஆத்மி வேட்பாளரை நிறுத்தும். பாஜகவின் அறிவிப்புக்காகத்தான் குஜராத்தின் வேட்பாளர்களை முடிவு செய்தும் அறிவிக்காமல் இருக்கிறோம்.’ எனக் கூறினார்.