

ஜம்மு காஷ்மீரில் ஷோபியான், புல்வாமா மாவட்டங்களில் இன்று நடந்த இரு என்கவுன்ட்டர் சம்பவங்களில் அன்சர் காஸ்வத்துல் ஹிந்த் தீவிரவாத அமைப்பின் தலைவர் அகமது ஷா உள்ளிட்ட 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷோபியான் நகரில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று இரவிலிருந்து நகரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் சரண் அடைய வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் கேட்டுக்கொண்டும் அவர்கள் இணங்கவில்லை.
இதையடுத்து நள்ளிரவில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்று அதிகாலையில் நடந்த சண்டையில் மேலும் 2 தீவிரவாதிகள் என 5 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தரப்பில் 4 பேர் காயமடைந்தனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நவ்பாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலையில் நடந்த மோதலில் இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த என்கவுன்ட்டரில் அன்சர் காஸ்வத்துல் ஹிந்த் தீவிரவாத அமைப்பின் தலைவர் அகமது ஷாவும் கொல்லப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.