

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ரயில்போக்குவரத்து சேவை குறைக்கப்படுமா அல்லது நிறுத்தப்படுமா என்பதற்கு ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கரோனா வைரஸ் முதல் பரவிய நேரத்தில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால், ரயில்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறுமாநிலங்களில் பணியாற்றிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக நடக்கத் தொடங்கினர். அதன்பின் ரயில்போக்குவரத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் தொடங்கியது.
இந்நிலையில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் ரயில்போக்குவரத்து முடக்கப்படுமா அல்லது சேவை குறைக்கப்படுமா என்றஅச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், பல்வேறு மாநிலங்களில் லாக்டவுன் அறிவித்திருப்பதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக ரயில்களில் அதிக அளவில் பயணித்துவருகின்றனர். இதனால் ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரயில்சேவைக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை. ரயில் சேவை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும். ரயில் சேவையை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ எந்தத்த திட்டமும் இல்லை. அவ்வாறு வரும் செய்திகள் பொய்யானவை.
மக்கள் கூட்டம் அதிகரித்தால், உடனடியாக அந்தக் குறிப்பிட்ட தடத்தில் அதிகமான ரயில்களை இயக்க தயாராக இருக்கிறோம். தற்போது ரயில்களில் கூட்டம் இயல்பாகத்தான் இருக்கிறது, ரயில்சேவை குறித்து ஏற்கெனவே நாங்கள் அறிவித்துவிட்டோம்.
ஆதலால் ரயில் சேவை குறைக்கப்படும், நிறுத்தப்படும் என்று பயணிகள் யாரும், அச்சப்பட வேண்டாம். தேவைக்கு ஏற்ப ரயில்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுமே தவிரகுறைக்கப்படாது என்பதற்கு உறுதியளிக்கிறேன்.
அதேபோல ரயில்களில் பயணிக்க கரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவை என்று வரும் செய்தியும் தவறானவை. அவ்வாறு ரயில்வே ஏதும் கோரவில்லை.
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், ரயில்போக்குவரத்தைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ மாநில அரசிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை
இவ்வாறு சுனித் சர்மா தெரிவித்தார்.