கரோனாவால் மக்கள் உயிர் பயத்தில் இருக்கும்போது தடுப்பூசி ஏற்றுமதி சரியா?- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
1 min read

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவிவருகிறது, நம்நாட்டு மக்கள் கரோனா காரணமாக உயிர் பயத்தில் இருக்கும்போது, தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது சரியானதா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான் இருப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், தடுப்பூசிக்கு எந்தவிதமான பற்றாக்குறையும் இல்லை என மத்திய அரசு கூறி வருகிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் செயல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் “ கரோனா காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவது என்பது தீவிரமான பிரச்சினை. இதை கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாநிலங்களுக்கு இடையே எந்தவிதமான பேதமும் பார்க்காமல், வேறுபாடு காட்டாமல், கரோனா தடுப்பூசியை போதுமான அளவில் வழங்கி மத்தியஅரசு உதவ வேண்டும்.

நான் கேட்கிறேன், கரோனா பரவலால் நம்நாட்டு மக்கள் உயிர்பயத்தால் அச்சத்துடன் இருக்கும்போது, தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது என்பது சரியான நடைமுறையா. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கரோனாவுக்கு எதிராகப் போராடி அதைத் தோற்கடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 18 வயதினருக்குமேல் அனைவருக்கும் செலுத்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, மகாராஷ்டிரா அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மத்தியஅரசை வலியுறுத்தியுள்ளன. ஆனால், கரோனா தடுப்பூசி விவகாரத்தில் சில மாநிலங்கள் அரசியல் செய்கின்றன என மத்தி ய அரசு குற்றம்சாட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in